மகாநடிகனும்,பெரியார் மோதிரமும்...?

Category :

நடிகர் சத்தியராஜ்-‍க்கு பெரியார் மோதிரத்தை திராவிடர் கழக
தலைவர் வீரமணி அளித்தாலும் அளித்தார்...அதுபற்றி புளகாங்கிதம் அடைகிறார்கள் சிலர்.உண்மையிலேயே பெரியார் கொள்கைகளுக்கு நேர் மாறானது...இந்த சங்கதிகள்...

பெரியார் அணிந்திருந்த மோதிரத்தை,அடுத்தவர் அணிவதால் என்ன‌ ப‌ய‌ன்? மேலும் இது ப‌குத்த‌றிவிற்கே சவாலான செயலும் கூட‌.சாய்பாபா ப‌ட‌ம் போட்ட‌ மோதிர‌ம் அணிவ‌து மாதிரி.....ஒரு ச‌முதாய‌ சீர்திருத்த‌ ந‌டிக‌னை,நாய‌க‌னை பாராட்ட‌,எத்த‌னையோ வ‌ழிக‌ள் உள்ள‌ன‌வே.அய்யா வீர‌ம‌ணி அவ‌ர்க‌ளே ஏன் இந்த‌ த‌டுமாற்ற‌ம்...


என்ன‌ ஆயிற்று...இன‌ முர‌சு ச‌த்திய‌ராஜ்-க்கு....பெரியாராக‌ ந‌டித்த‌த‌ற்காக‌ அளித்தார்க‌ளாம்.இவ‌ர் ஏற்றுக் கொண்டாராம்....அய்யா,இந்த‌மாதிரி மூடப் பழக்கங்களை,பைத்திய‌க்கார‌த் த‌ன‌த்தைத்தானே வாழ்நாள் முழுதும்
எதிர்த்தார் பெரியார்.

ச‌த்தியராஜ் அவ‌ர்க‌ளின் பேச்சினை ஒலிநாடா மூல‌ம் கேட்டு இருக்கிறேன்.மிக‌வும் அருமையான மற்றும் சிந்த‌னையை த‌ட்டி எழுப்பும் பேச்சுக‌ள் அவை.

அனைவ‌ருக்கும் புரியும்ப‌டியான‌,அதே நேர‌த்தில் சுருக்க‌மான‌ பேச்சு ம‌கா ந‌டிக‌னுடைய‌து.அவ‌ர் நிச்ச‌ய‌மாக‌ ப‌குத்த‌றிவை த‌மிழ் ம‌க்க‌ளுக்கு மீண்டும் ஊட்ட‌,பெரும் ப‌ங்கு வ‌கிக்க‌ முடியும்.செய்வாரா தெரிய‌வில்லை....?

கடைசி வெறி:


1.போன‌ வார‌ம் வேலூர்‍ ப‌க்க‌த்தில் ஒரு த‌ங்க‌ கோவில் (300 கோடியில்)க‌ட்டியுள்ளார் ஒரு சாமியார்.அவ‌ர் அந்த‌ த‌ங்க‌த்தை ரிச‌ர்வ் பேங்க் ஆப் இந்தியா(RBI) மூல‌மாக வாங்கினாராம்.அந்த‌ இட‌ம் நூறு ஏக்க‌ர் நில‌த்தில் அமைந்துள்ள‌தாம்.அந்த‌ கோயிலுக்கு கும்பாபிசேக‌ம் ந‌ட‌ந்த‌ போது,பொதும‌க்க‌ளுக்கு அனும‌தி இல்லையாம்.....எல்லாம் வெள்ளை கார‌ணுக்குதானாம்.

என்ன‌மோ ந‌ட‌க்கிறது மக்களே.,...உஷார்....உஷார்....

2.சென்னை கபாலீச்வ‌ர‌ர் கோயில் கோபுர‌த்தை இடி தாக்கிய‌தாம்....கோபுர‌ப‌ட‌த்தை வைத்து ஒரு "பால‌ஸ்தான‌ பூஜை" செய்தார்க‌ளாம்....எப்பா பூஜையை எப்ப வேணாலும் நடத்தலாம்...

மொத‌ல்ல‌ இடி தாங்கி வைங்க‌....மக்கள காப்பாத்துங்க...
(ப‌ட‌ம் சுட்ட‌து:மாலைச்சுட‌ர்)

சொந்த செலவில் சூனியம்?

Category :

அப்படித் தான் தெரிகிறது.தெரியாத்தனமா "சிவாஜி" திரைப்
படத்துக்கு என் நாலரை வயது மகன் மற்றும் நான்கு வயதுடைய‌
தங்கை மகனை அழைத்து போனது தவறான முடிவோ எனத்
தோன்றுகிறது.

ஊரும்,ஊடக உலகமும் "சிவாஜி,சிவாஜி.....வாஜி,வாஜி,பாவ்ஜி...என‌
கூச்சல் போட்டதால் ஒரு ஆசையில் போய்விட்டோம்.
இப்படம் தான் அந்த இரு சிறுவர்களுக்குமே முதல் திரைப்படம்.இருவ‌ரும்
தூங்காம‌ல் பார்த்துகொண்டிருந்த‌து ஆச்ச‌ரிய‌மாக‌வும் இருந்த‌து.
அடுத்த‌ நாள் முத‌ல் ஆர‌ம்ப‌மான‌து...."சிங்க‌ம் சிங்கிளாத்தான் வ‌ரும்".....

இப்போது தான் வினையே ஆர‌ம்ப‌மாகியுள்ள‌து.சிறுவ‌ர்க‌ளின் போக்கு
தாறு,மாறாக‌ உள்ள‌து.கால்க‌ள் தானாக‌ உய‌ருகின்றன‌...அவ்வ‌ப்போது
க‌ட்டிலிலிருந்து ப‌ற‌க்க‌,விழுகிறார்க‌ள்.

கூட‌வே தொலைக்காட்சியும்(இல்லை டி.வி) திரும்ப‌,திரும்ப‌ இந்த‌
ப‌ட‌த்தின் பாட‌ல்க‌ளையும்,காட்சியையும் காட்டி தொந்த‌ர‌வு செய்த‌தால்
அவ‌ர்க‌ளின் பார்வை ர‌ஜினியின் மேல் ப‌ட்டு விட்ட‌து.

இதையெல்லாவ‌ற்றையும் விட கொடுமையான‌து என்ன‌வென்றால்,உன் பெய‌ர் என்ன‌ என‌ யாராவ‌து என் மகனிடம் கேட்டால்''ர‌ஜினி" என‌ கூறுவ‌து தான்.ப‌ள்ளிக்கூட‌த்தில் போய் விசாரித்தோம்...அங்கு த‌ன் பெய‌ரை ஒழுங்காக‌ கூறுகிறானாம்.அங்கு அட‌க்க‌மாக‌ உள்ளானாம்.

வீட்டுக்கு வ‌ந்த‌வுட‌ன் வேலையை ஆர‌ம்பித்துவிடுகிறான்.....குதிப்ப‌து,தாவுவ‌து
என‌ப் போன்ற‌ சேட்டைக‌ள்....நானும் விள‌க்குகிறேன்....மேலும் ரஜினி சன்டை போடமாட்டார்,அவருக்கு ''டூப்'' இருப்பார்கள் எனத் திரும்ப,திரும்ப கூறவேண்டியுள்ளது.சினிமாவில் குதிப்ப‌து...
சும்மா என்று....ப‌ஞ்சு மெத்தை‌யில் தான் அவ‌ர்க‌ள் குதிப்பார்க‌ள்...நாம் அது
மாதிரி குதித்தால் கால் உடைந்து விடும் என்று...

க‌ண் கூடாக‌ தெரிந்த‌து,குழ‌ந்தைக‌ள் எவ்வாறு ஊட‌க‌ சாத‌ன‌ங்க‌ளால்
மாற்ற‌ப்ப‌டுகிறார்க‌ள் என்ப‌தை....!

டிஜிடல் பேனரும்,அடங்காத சண்டையும்....

Category :

இப்போதெல்லாம் கடலூரை சுற்றி வளைத்திருப்பது...
பாழாய்ப்போன டிஜிடல் பேனர்கள் தான்...

நேற்று(18-08-2007) கூட பா.ம.க வும் ,விடுதலை சிறுத்தைகளும்
அடித்து கொண்டது அநாகரீகத்தின் உச்சகட்டம்.பாவம்
அப்பாவி தொண்டர்களின் வாழ்க்கையை அழிக்கும்
இந்த சண்டையை விட்டால் எத்தனையோ குடும்பங்கள்
மகிழ்ச்சி அடையும்.

அதுவும் பேனர் என்றால் 10x10 அல்ல....10 அடிக்கு 100அடி
அகலத்தில் கூட அமைக்கிறார்கள்.இதில் அவர்கள் பொதும‌க்க‌ளை
நினைத்துக் கூட‌ பார்ப்ப‌தில்லை.பேருந்து நிறுத்த‌ம் கூட‌ ம‌றைந்து
போகும் அள‌வுக்கு,ஒரு நோயாகிப் போயுள்ள‌து இந்த‌ மோக‌ம்.

க‌ல்யாண‌ம் முத‌ல் காதுகுத்த‌ல் வ‌ரை இந்த‌ வியாதி ப‌ட‌ர்ந்துள்ள‌து.
டிஜிட‌ல் பேன‌ர் இல்லாத‌ விழா,ஒரு விழாவாக‌வே இல்லை என்ற‌
நிலை ஏற்ப‌ட்டுவிட்ட‌து.

அர‌சிய‌ல் க‌ட்சி ச‌கோத‌ர‌ர்க‌ளே ம‌க்க‌ளை ப‌ற்றி கொஞ்ச‌ம்
நினைப்போம்.ஒன்றும் செய்யாவிட்டால் கூட‌.

உதாரணத்திற்கு,இரண்டு மாதங்களுக்கு முன் வடலூர் சென்ற போது வடலூரே காணாமல் போனது.சுமார் 200 டிஜிடல் பேனர்கள்
முக்கிய நான்கு முனை சாலையையே அடைத்திருந்தன.
வைக்கப்பட்டது தமிழக‌அமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை வரவேற்க...அவர் வந்து மூன்று நாட்கள் கழிந்தும்
அப்படியே தான் டிஜிடல் பேனர்கள் வரவேற்றுக் கொண்டிருந்தன.

காவல்துறை தான் ஏதாவது செய்ய வேண்டும் .

பாலைவனப் ப‌ரிதாப‌ங்க‌ள்?‍

Category :

சில‌ தினங்களுக்கு முன் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த‌
இளைஞரை சந்திக்க நேர்ந்தது.அவர் துபாயிலிருந்து திரும்பி
இருந்தார்,(அரசின் கருணை மூலம்)-amnesty அம்னெஸ்டி மூலம்.

த‌ம்பியின் க‌தை கேட்டு ம‌ன‌தே க‌ன‌த்த‌து.என்ன‌ செய்வ‌து ஒரு ப‌க்க‌ம்
சாப்ட்வேர்(software) மூல‌ம் ந‌ம் இளைஞ‌ர்க‌ள் ப‌ண‌த்தில் மித‌ப்ப‌தும்
ஞாப‌கம் வ‌ந்த‌து.

த‌ம்பி ப‌த்தாவ‌து வ‌ரை ப‌டித்துள்ளார்...வெளிநாட்டு மோக‌த்தினால்
ம‌ட்டும் இல்லாம‌ல் த‌ன் குடும்ப‌ நிலையை மாற்ற‌வும் நினைத்து
ஒரு பெரும் தொகையை ஏஜென்டு‍க்கு கொடுத்துவிட்டு விமான‌ம்
ஏறியுள்ளார்.

இற‌ங்கிய‌ பின்பு தான் தெரிந்த‌து,அது ஒட்ட‌க‌ கூடார‌ம் என்று.துபாய்
ந‌க‌ரிலிருந்து வெகு தொலைவில் ஆள் அர‌வ‌ம் இன்றி இருந்த‌தாம்.
வேலை புல் தோட்ட‌த்தில் ,புல் அறுத்து ஒட்ட‌க‌த்துக்கு இடுவ‌து.

த‌ன் ஊரில் ,வீட்டில் உள்ள‌ மாட்டுக்கு கூட‌ ஒரு வேளை புல்
போடாத‌வ‌ன்.புது வாழ்க்கை புல்லே ஆன‌து கொடுமையாய் இருந்த‌து.
ஏஜென்ட் ஏமாற்றி இருக்கிறான்.பொறுத்து கொண்டு காசுக்காக‌ ப‌ணி
செய்த‌போது அர‌பி உரிமையாள‌ர் ச‌ம்ப‌ள‌மே கொடுக்காத‌ போது தான்
புரிந்த‌தாம்,அர‌பி நேர்மையான‌ ஆள் அல்ல‌ என்று.

மூன்று அல்ல‌து நான்கு மாதம் ச‌ம்ப‌ள‌மே இல்லையாம்.பின்பு ஒரு மாத‌ம் ச‌ம்ப‌ள‌ம் கிடைத்த‌தாம்.இப்ப‌டி ஒரு வ‌ருட‌ம் த‌ண்ட‌னையை க‌ழித்து,ஒரு நாள் சொல்லிக் கொள்ளாம‌ல் வெளியேறி துபாய் ந‌க‌ருக்கு சென்றிருக்கிறார்.

அங்கே வேறு ஒரு த‌மிழ் ந‌ண்ப‌ரின் உத‌வியுட‌ன் ஒரு கார் ஒர்க்ஷாப்‍‍‍-பில்
சேர்ந்திருக்கிறார்.இது முறை த‌வ‌றிய(illegal) பணி தான் என்ன‌ செய்வ‌து...குடும்ப‌த்தை காப்பாற்ற‌ வேண்டும்,முக்கிய‌மாக‌ வாங்கிய‌ க‌ட‌னுக்கு வட்டி க‌ட்டியாக‌ வேண்டும்.வெளியே த‌லையே காட்டாம‌ல் இரு வ‌ருட‌ங்க‌ள் வேலை செய்திருக்கிறார்,கிடைக்கும் ப‌ண‌த்தை தெரிந்த‌வ‌ர்க‌ள் மூல‌மாக‌ வீட்டுக்கும் அனுப்பி இருக்கிறார்.

இத‌னிடையே அரசு, விசிட் விசாவில் வ‌ந்து திரும்பாத‌வ‌ர்க‌ளுக்கும்,வேறு
வேலைக்கு த‌ப்பி ஓடிய‌வ‌ர்க‌ளுக்கும் க‌ருணை அடிப்ப‌டையில் த‌ங்க‌ள் நாடு
திரும்ப‌லாம் என‌ அறிவித்த‌து.அந்த‌ந்த‌ நாட்டு தூத‌ர‌க‌ங்க‌ள் மூல‌மாக‌ திருப்பி அனுப்ப‌ ஏற்பாடு செய்த‌து.விமான‌ டிக்கெட் எடுக்க‌ வ‌ழியில்லாத‌வ‌ர்க‌ளுக்கு
இந்திய‌ சேவை அமைப்புக‌ள் உத‌வி செய்த‌ன‌.

த‌ம்பி இதை அறிந்து இந்திய‌ தூத‌ர‌க‌த்தில் அடைக்க‌ல‌ம் ஆகியிருக்கிறார்.
அங்கு இருந்த‌ அதிகாரிக‌ள் இவ‌ர் க‌தையை கேட்டு உத‌வி செய்வ‌தாய் ஆறுதல் வார்த்தை கூறியிருக்கின்ற‌ன‌ர்.புல் தோட்ட‌த்து முத‌லாளி அர‌பியிட‌ம் பாஸ்போர்ட் மாட்டிக்கொண்ட‌தால்,சிர‌ம‌ப்ப‌ட்டு அர‌சின் ஆத‌ர‌வினால் த‌மிழ்நாடு வ‌ந்து சேர்ந்துள்ளார்.

கடைசியாக, இனி என்ன‌ செய்ய‌ப்போகிறீர்க‌ள் என‌க் கேட்டேன்.ப‌திலைக் கேட்டு திடுக்கிடத் தான் முடிந்த‌து.

''த‌டைக்கால‌ம்(Ban period) முடிந்த‌வுட‌ன் ஒரு வ‌ருட‌ம் க‌ழித்து மீண்டும்
துபாய் செல்வேன்.''

பட்டய கிளப்பிய பட்டறை!

Category :

ஆமாம்!சென்னை பதிவர் பட்டறை-2007 மிகச் சிறப்பான முறையில்
நடந்தேறியுள்ளது.

இதன் அடுத்த சிறப்பு என்னவென்றால் பங்கேற்பாளர்களும்,
தன்னார்வலர்களும் ஆக்க பூர்வமான முறையில் விவாதித்தது மற்றும்
செயல்முறை மூலம் சந்தேகங்களை களைந்தது....இந்த நிகழ்வு ஒரு
இனிய "வரப்பிரசாதம்" என்றே கூறலாம்.

என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த முன்னாள் கல்லூரி முதல்வர்,
ஒரு மாணவன் மாதிரி தமிழ் வலைப்பதிவு பற்றி கற்க ஆர்வமாய்
இருந்தார்.செயல்முறை பயிற்சியின் குறிப்புக‌ளை தன் சொந்த குறிப்பேட்டில்
உடனுக்குடன் பதிந்தது ஆச்சரியமாக இருந்தது.அவர் காரைக்கால்‍-லிருந்து
வ‌ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே மாதிரி புது வ‌லைப்ப‌திவ‌ர்க‌ள் செய்முறை ப‌யிற்சியில் மிக‌
ஆர்வ‌த்துட‌ன் ப‌ங்கேற்ற‌தை காண‌ முடிந்த‌து.

முக்கிய‌மாக எந் நிக‌ழ்விலும் தொய்வே இட‌ம் பெறாம‌ல் மாலை 5.30 ம‌ணி வ‌ரை அனைவ‌‌ரும் ப‌ங்கேற்ற‌து ஒரு விய‌ப்பான‌ நிக‌ழ்வே.
ப‌திவ‌ர்க‌ளின் ஆர்வ‌ம்,உறுதி போன்ற கூறுகள் தமிழ் எப்போதும் த‌லை நிமிர்ந்தே வாழும் என‌ க‌ர்வ‌த்துட‌ன் கூறிக் கொள்ள‌லாம்.

க‌டைசியாக‌ இந்த‌ ப‌ட்ட‌றை‍-யை சிற‌ப்பாக‌ ந‌ட‌த்தி முடித்த‌ மா.சிவ‌குமார்,
விக்கி,பால‌பார‌தி போறோர்க்கும் ஏனைய‌ தோழ‌ர்,தோழிய‌ருக்கும்
ந‌ன்றிக‌ள் ப‌ல‌....

ப‌ட்ட‌றைக்கு பேருத‌வி செய்த‌ சென்னை ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ த‌மிழ்த் துறைக்கும்,ஆத‌ர‌வு அளித்த‌ ஹெட்வே ப்ரொபெர்டீஸ்(Headway Properties),லின‌ஸ் அகாட‌மி(Lynus Academy),சிஃபி(sify),த‌மிழ்ம‌ண‌ம்,கிழ‌க்கு ப‌திப்ப‌க‌ம் ம‌ற்றும் ச‌ற்றுமுன் குழும‌த்திற்கும் நெஞ்சார்ந்த‌ நன்றி.

திருவாளர் திருமிதி...கேலிக் கூத்து!

Category :

அபத்தங்கள்,அசிங்கங்கள் அரங்கேறும் ஒரு இடம்.
சன் டி.வி‍ யில் "சனி" யில் நடைபெறும் ஒரு
நிகழ்ச்சி.

கணவன்,மனைவி ஜோடியாக பங்கு பெறும் ஒரு
பரிசுப் போட்டி நிகழ்ச்சி.ஆனால் இங்கு சமீப காலமாக‌
அசிங்கங்களே அரங்கேறுகின்றன.

ஆண்கள் "நைட்டி"யை போட்டுக் கொண்டும்,பெண்கள்
"மீசை"யை மாட்டிக் கொண்டும் பால் மாறி ஆடிக்
காட்டுகின்றனர்.இது தான் பெண்கள் முன்னேறி விட்டதாய்
காண்பிக்கும் அங்க அடையாளமோ தெரியவில்லை.?

இதில் வருபவர்களுக்கு இருக்கும் ஒரே குறிக்கோள்...தங்கள்
முகம் திரையில் வர வேண்டும் என்பது தான்.

இந்த கண்றாவியை நான் விரும்பி பார்ப்பது இல்லை...வெம்பி
பார்க்கிறேன்.என் வீட்டினரும் மாங்கு,மாங்கு என பார்ப்பதால்.
என் வீட்டினரை கூட வேறு நல்ல காட்சிக்கு மாற்றும் முயற்சியும்
தோல்வியிலேயே முடிகிறது.அபத்தத்தை ஆண்டு முழுதும்
எப்படி பார்க்கிறார்களோ என தெரியவில்லை.?

ஒன்று மட்டும் நிச்சயம்...சமுதாய அக்கறை அற்ற,
தமிழ் விரோத,"காசை"யே கொள்கை என தொழில் புரியும்
"நம்பர் ஒன் சேனல்"....சன் தொலைக்காட்சி மட்டுமே.
இல்லை இல்லை...சன் டி.வி....