6ம்,8ம் குப்பையை பொறுக்கி.....?

Category :

போன வாரம் மதியம் சாப்பிட்டு கொண்டிருந்த போது அம்மா...மா......என
குரல் கேட்டபோது,பிச்சை கேட்கிறார்களோ என என் மனைவி
வெளியில் சென்று பார்த்தார்.பின்பு தண்ணீர் கேட்கிறார்கள் ,பேப்பர்
பொறுக்கற சின்ன பசங்க என எங்களிடம் சொல்லி விட்டு ஒரு பாட்டிலில்
கொண்டு சென்றார்.

திரும்பிய போது ரொம்ப சின்ன பசங்கங்க.. என சொன்னார்.,அப்படியே
அவசரமாக வாசலில் சென்று பார்த்து அதிர்ந்தேன்.
பெரியவனுக்கு 8வயது,சின்னவனுக்கு 6வயதும் இருக்கும்.புத்தகம் படிக்கும்
வயசில்,அதனுள் இருக்கும் காகிதத்தை பொறுக்கும் அவலம்.,

இருவரையும் அருகே அழைத்தேன்.,அச்சத்துடன் நெறுங்கி வந்தனர்.பள்ளிக்கூடம்
போவலையா என்றேன்.,இல்ல என்று சிறியவன் தான் பதில் சொன்னான்.ஏன்? என்றேன்.,அப்பா,
அம்மா நிறுத்திட்டாங்க......

உன் பெயர் என்ன என்று பெரியவனிடம் கேட்டேன்.,சங்கீதா என பெண் குரல் கேட்டு மீண்டும்
அதிர்ந்தேன்.ஆமாம்,கிராப் வெட்டிய தலை,கால் சட்டை,மேல் சட்டை என.....உன் பெயர் என்ன
என்று சின்ன பையனிடம் கேட்டேன்.,அரவிந் என அழகாக சொன்னான்., என்ன பாவம் செய்தனர்
இந்த இளம் தளிர்கள்.,

பெற்றவர்களே இந்த கொடுமையை செய்யும் போது,சட்டமெல்லாம் என்ன செய்யும்.அப்பா,என்ன வேலை செய்யறார் என்றேன்.?,கூலி வேலை என்றனர்.,அம்மா-வும் கூலி வேலை செய்யறாங்க என்றனர்.

எத்தனையாவது வரைக்கும் படிச்சீங்க என்றேன்.,ரெண்டாவது என்றனர்.,யார் பேப்பர் பொறுக்க
சொன்னது என்றேன்.,அப்பா தான் என்றனர்.,வீடு எங்கே என்றபோது கேப்பர் மலைக்கு பக்கத்தில்
என கூறினர்.சிறுவன் போலான்கா....என அக்காவை அழைத்தான்., நான் சாப்பிடறீங்களா எனக்
கேட்டும் மறுத்துவிட்டனர்.

கடைசியாக ஒரு நாளைக்கு எவ்ளோ சம்பாதிக்கறீங்க என்றேன்.,இருவது முதல் அம்பது ரூபா
என்றனர்,

அதற்கு மேலும் அவர்களுக்கு பொறுமை இல்லாமல்,அவரவர் சாக்குகளை தூக்கிக்கொண்டு
நடந்தனர்.

நான் அவர்களை பார்த்துக்கொண்டே இருந்தேன்,எங்கள் தெருவை கடக்கும் வரை. அன்றைய தினம்
என் மனதின் பாரம் குறைய வெகு நேரம் ஆகியது.அடுத்த முறை அவர்களைக் கண்டு ஏதாவது
செய்ய ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

கடைசி வரி:
அந்த இளந் தளிர்கள் இன்னும் என் கண்ணில் அகப்படவில்லை.,,,,,,அடுத்த நாள்
குழந்தைகள் தினம்.,
பள்ளிகளில் கொண்டாட்டம்.,,இந்த தளிர்கள் எந்த ஊரில் பேப்பர் பொறுக்கிக் கொண்டிருந்தார்களோ?....

நண்பனா? மனைவியா??..ஏன் இந்த முடிவு???

Category :

ஒரு வருத்தம் தரும் கடந்த வார நிகழ்வு,.

இரு இனைபிரியா கேரள நண்பர்கள்,ஜாபர் அலி மற்றும் சந்தோஷ்(27).கடந்த ஒன்பது வருடங்களாக ஒரே செருப்பு கடையில் பணி,இதன் மூலம் நட்பு இறுக்கமானது.பொருளாதார உயர்வுக்கு என போனவாரம் சந்தோஷ்
ஷார்ஜா(Sharjah)சென்றார்,வேலை கிடைத்து அல்ல.வேலை தேட.
பொதுவாகவே மலையாளிகள் வேலை தேட துபாய் போவது என்பது சாதாரணம்.இப்பொது விமான டிக்கட்டும் மலிவான விலையில்
கிடைப்பதால் "விசிட் விசா"வில் வேலை தேடும் படலம் .

சந்தோஷ் ஷார்ஜா வந்த இரு தினங்களில் ,ஜாபர் அலி நண்பன் சந்தோஷ்-இன் பிரிவினால் துயரப்பட்டு ,மன இறுக்கத்தினால் மாரடைப்பினால் மரணம் அடைகிறார்.இத்துயரச் செய்தியை மற்ற நண்பர்கள் சந்தோஷ்-க்கு தெரிவிக்க அதிர்ச்சியடைகிறார்.உடனே நாடு போகவேண்டும் என ஷார்ஜா-வில்
ரூமில் உடன் தங்கியோரிடம் தெரிவிக்கிறார்.அவர்கள் சமாதானப்படுத்தி,
இப்போது தான் நிறைய செலவு செய்து வந்துள்ளாய்.,இன்னும் வேலை கூட கிடைக்கவில்லை என்று கூறி உண்மையை புரிய வைக்கின்றனர்.

ஆனால் மனம் கேட்காமல்,இரவைக் கூட தள்ள இயலாமல் ,தூக்கில் தொங்கிவிடுகிறார்.
ஒரு நண்பனின் நட்பு மரணத்திலும் தொடர்கிறது. கொஞ்சம் யோசனை செய்திருந்தால் சந்தோஷ் இன்று வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

இதில் கொடுமையான துயரம் என்னவெனில் தன் மனைவியையும்,ஒன்பது மாத குழந்தையையும் அநியாயமாய் கடைசி நேரத்தில் கூட மறந்தது.பாவம் ஜெயஷ்ரி(சந்தோஷ் மனைவி),தற்போது ஒன்பது மாத குழந்தையுடன்...(கணவனின் உயிரற்ற உடலுக்காக.,காத்துக் கொண்டு)



கடைசி வரி:
  • இந்த மாதிரி அனாவசிய தற்கொலைகள் இப்போது துபாயில் அதிமாகிவருகிறது.சிறு ஏமாற்றத்தை கூட தாங்க இயலாத ஒரு அவல வாழ்க்கை முறையை இப்பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்படுத்திவிட்டதோ எனக் கவலை கொள்ளவேண்டி உள்ளது.
  • குறைந்தது மாதத்தில் 20 தற்கொலைகள் நிகழ்கின்றன,அதிகமானோர் மலையாளிகளே!
நன்றி:காமுதிஆன்லைன்,கேரளா மற்றும் கலீஜ் டைம்ஸ்

சிக்-குன் -குனியாவும்,சின்ன பொண்ணு ஆயாவும்!

Category :

பெயர்:சின்ன பொண்ணு
ஊர்:கடலூர்
உறவு:ஆயா(அம்மாவின் அம்மா)
வயது:80+
தற்போது:தனியார் மருத்துவமனையில்
காரணம்:சிக்-குன் -குனியா

சாதாரண காய்ச்சல் என்றுதான் ஆயாவை உள்ளூர் மருத்துவரிடம் அழைத்து சென்றார்,அம்மா.மருத்துவர் மருந்து,மாத்திரை கொடுத்து அனுப்பி விட்டார்.
பின்னர் இரண்டு நாட்கள் மருந்து,சாப்பிட்டும் ஒன்னும் முன்னேற்றம் தெரியாததால்,மீண்டும் படையெடுத்தார்கள்,மருத்துவரை நோக்கி.,

இப்போது மருத்துவர் சொன்னது,சிக்குன் குனியா என்று.பத்து நாட்களுக்கு இப்படித்தான் சுரமும்,மூட்டு வலியும் இருக்கும் என்றார்.
ஆயாவினால் நிற்க கூட முடியாமல்,அம்மா மற்றும் என் துணைவி உதவி கொண்டு தான்,"ஒன்னுக்கும்,ரெண்டுக்கும்" போனார்கள்.

இரவில் ஒரே சத்தம்,பினாத்தல்,ஆயாவினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.அடுத்த இரண்டு நாட்களில் கால்கள் ரொம்ப வீங்கிவிட்டன.மருத்துவரிடம் போனபோது,பெரிய
மருத்துவமனையில் சேர்த்துவிடுங்கள் என கூறிவிட்டார்.

பின்னர் கடலூரில் புகழ்பெற்ற மருத்துவமனையில் சேர்த்து,இன்றுடன் ஏழு நாட்கள் ஆகின்றன.இன்னமும் ஆயாவினால் பழய நிலைக்கு வர இயலவில்லை.

சுரம் விட்டு,விட்டு வருகிறது,அதனால் மருத்துமனையில் இருக்க வேண்டிய கட்டாயம்.அதிகாரம் செய்து கொண்டிருந்த ஆயா இப்போது அடங்கி ,ஒடுங்கிப் போய்.....

"ஆறு பேர் உள்ள வீட்டில்,ஆயாவை மட்டும் ஏன் கடித்தது அந்த கொசு?".யாராவது,மருத்துவ ஜீவிகள் பதில் சொல்வீர்களா?

கடைசி வரி:
சிக்-குன் -குனியா பற்றி
"Chikungunya fever is a viral disease transmitted to humans by the bite of infected mosquitoes. Chikungunya virus (CHIKV) is a member of the genus Alphavirus,in the family Togaviridae. CHIKV was first isolate
from the blood of a febrile
patient in Tanzania in 1953, and has since been identified repeatedly in west,central and southern Africa and many areas
of Asia, and has been cited as
the cause of numerous human epidemics
in those areas since that time.

The virus circulates throughout much of Africa, with transmission thought
to occur mainly between mosquitoes and monkeys."

சென்னையில் நடந்த வலைப்பதிவர் மாநாடு!

Category :


சென்ற வாரம் நடந்த வலைப்பதிவர் மாநாட்டில் எத்தனை தமிழ் வலைப்பதிவர்கள் கலந்து கொண்டனர்.ஏன் இது பற்றிய விரிவான செய்தி தமிழ்மணத்தில் யாரும் போடவில்லை? இதை இனைந்து நடத்தியது யாகூ இந்தியாவாமே?நேற்று தற்செயலாய் பிபிசி தமிழ் இணையத்தை பார்த்த போது தான்,இது பற்றிய செய்தி தெரியவந்தது. யாராவது கலந்து கொண்டவர்கள் ,விரிவான பதிவை போடலாமே? ஆர்வமுடன் காத்திருக்கிறேன். -முகு-

குறிப்பு:
இந்திய அளவில் இப்படிப்பட்ட வலைப்பதிவுகளை உருவாக்குபவர்கள் அதிகம்பேர் சென்னையில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தகவல்:BBC Tamil

பாவப்பட்ட மந்திரி,ஆஸ்கர் பெர்ணான்டஸ்!

Category :



எந்த இலாகாவும் இல்லாமல், ஒரு நல்ல மத்திய மந்திரி நீண்ட
காலமாக மத்திய அரசில் இருக்கிறார்.ஏன் என்று புரியவில்லை?

நம் பிரதம மந்திரியும்,சோனியா அம்மையாரும் ஏன் இதுவரை ஒரு இலாகா கூட
ஒதுக்காமல் உள்ளனர் என்றும் புரியவில்லை.

அந்த மந்திரி என்ன வேலை செய்து,சம்பளம் பெறுகிறார்?யாராவது விளக்குங்களேன்?அவராலுமும் சுய மரியாதை இல்லாமல்,சும்மாவே எப்படி இருக்க முடிகிறது?

அரசியலில் இதெல்லாம்,சகஜம் என்றாலும் ஏன் யாரும் கேட்கவில்லை?
அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்கிறது?யாராவது பதில் சொல்லுங்கள்!

இதில் என்ன கொடுமை என்றால் சில மந்திரிகள் இன்னமும் நாலைந்து துறைகளை
சுமந்து கொண்டு ஒன்னும் செய்யாமல் உலாவுவது!

அன்புடன்,
முகு

கொலைகாரிகளாவது ஏன்?

Category :


மன்னிக்கவும்,இந்த சொல்லை பயன்படுத்தியமைக்கு,நம்முடைய சில சகோதரிகளின் செயல் தான் இப்படி எழுதத் தூண்டியது.

"கொலையும் செய்வாள் பத்தினி"- பழமொழி; இப்பொது,காதலனுக்காக
(அப்பாவி) கணவனையே கொல்கிறார்கள்.

கள்ள காதலனுக்காக,கல்யாணம் செய்த சில நாட்களிலேயே அப்பாவி கணவனைக் கொன்றது.கள்ள காதலனுக்காக,பெற்ற தாயையே கொன்றது;
கள்ள காதலனுக்காக,மாமியாரையே கொன்றது.இந்த கேவலங்கள் எல்லாம்,தமிழ் நாட்டில் தான்(ஜுன் மற்றும் ஜுலை 2006-யில்) அரங்கேறி உள்ளன.

இதற்கெல்லாம் ஒரு வரியில் பதில் சொல்லலாம்.,நடுத்தர மக்களின் பொருளாதார,சமூக மாற்றங்கள் தான்.இன்றைய குழந்தைகள் தகவல்,தொழில்நுட்ப, அறிவியல் புரட்சி-யினால் புத்திசாலிகளாகவே பிறக்கிறார்கள்.தொலைக்காட்சி ஊடகங்கள் தான் மக்களை சிந்திக்கவும்,சிதைக்கவும் செய்ய துணைபுரிகின்றன.

இன்றைய காலகட்டத்தில் வயதுக்கு வந்த இளைஞர்,இளைஞிகளை நெறிப்படுத்துவதில் பெற்றோரின் பங்கு மிக அதிகம்.கல்லூரி செல்லும் பருவம் வந்தவுடன் பிள்ளைகளிடம் மனம் திறந்து பேசவென்டும்.காதல்,காமம் பற்றிய தகவல்களைக் கூட பறிமாறிக்கொள்ளலாம்,குறை நிறைகளை பேசலாம்.

கல்யாணம் ஆன பிறகு,கணவனும் மனைவின் மனதைப் புரிந்து கொண்டு,இல்லறத்தில் சமபங்கு கொடுக்க வேண்டும்.காமம் என்பது பொதுவானது,அதை இரு பாலரும் உணர்ந்து,வாழ்க்கையை இனிமையாக்க வேண்டும்.நிறைய பெண்கள் தடம் மாறுவது,கணவன்,
மனைவியின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளாததே காரணம்.
அதனால் தான் தற்போதைய ஒழுக்க சீர்கேடுகள்.

பெற்றோரும் தம் பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும்.
பெற்றோர் தவறு செய்து கொண்டு,பிள்ளைகளை ஒழுக்கமுள்ளவர்களாக
வளர்க்க முயல்வது கேலிக்குறிய செயல் தான்.

அதேமாதிரிதான் ஊரெல்லாம்,மேய்ந்து கொண்டு வீட்டில் உள்ளவள்
மட்டும்,உத்தமியாய் வாழ உதைத்து கொடுமைப்படுத்துவதும்,தடையை
மீறத்தான் வழி வகுக்கும்.

ஆண்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்,பெண்கள் இப்பொது பொருளாதாரத்தில் முன்னேறியும்,தற்சார்பும் பெற்று விட்டார்கள்.அதனால் ஏமாற்றவோ,ஏதேச்சிகாரம் செய்யவோ முடியாது.

புரிந்து கொண்டு வாழ்வோம்.(அடுத்தவர் மனைவியுடனோ அல்லது அடுத்தவர் கணவனுடனோ அல்ல!)

கடைசி வரி:

வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்'பூ''
அதை அன்பால் மட்டுமே நுகரமுடியும்!

இனிய நண்பன் செந்திலின் கடலூர் வருகை!

Category :

ஜுலை 08,2006 அன்று என் இனிய நண்பன் செந்தில் ,அவர் துணைவி அருணா மற்றும் இவர்களின் புதல்வி ராஜி மதியம் சுமார் 2.00 மணி அளவில் வந்திறங்கினர் வீட்டின் முன்.,
அளவில்லா மகிழ்ச்சி எங்களுக்கு;போன வருடமே வந்திருக்க வேண்டும்., தாமதமான வருகை எனினும் மிகுந்த மகிழ்ச்சி என் துணைவிக்கு.

எல்லோரும் சாப்பிட்டு கதை.,கதையாய் நிறைய விசயங்கள் பேசினோம்.,பின்பு இரண்டு மணி நேர ஒய்வுக்கு பிறகு கடலூர் கடற்கரைக்கு(பீச்) சென்றோம்.,
கடலில் காலை நனைத்துவிட்டு,ஒரு இடத்தில் அமர்ந்தோம்.
முகிலும்,ராஜியும் நன்கு ஒட்டிக் கொண்டனர்.,எங்களைச் சுற்றி,சுற்றி ஒடி அமர்க்களம் செய்தனர்.பின்பு மிளகாய் பஜ்ஜி,அய்ஸ்கிறீம்., என சாப்பிட்டு., குடும்ப நிகழ்வுகளை பேசினோம்.இடையில் அருணாவும்,எழிலும் பேசிக்கொண்டனர்.,யாரைப் பற்றி பேசப் போறாங்க???தெரிந்தது தானே!

எட்டு மணிக்கு ஆட்டோவில் நேராக கடலூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஆனந்த பவனுக்கு சாப்பிட இறங்கிக் கொண்டோம்.உள்ளே நல்ல கூட்டம்., அதனால் குளிர் அறைக்குச் சென்றோம்.,பிடித்தமானவற்றை உபசரிப்பாளரிடம் சொன்னோம்.,ராஜி யின் அழகுத் தமிழ் பேச்சு ,அனைவரையும் கவர்ந்தது.,பக்கத்தில் அமர்ந்து உண்டவர்களும் ரசித்தனர்.உணவும் அருமையாக இருந்தது.,

அங்கிருந்து ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தபோது மணி இரவு 10.00.,விருந்தினர்
மாடியில் தூங்கினர்.,

காலையில் அப்பா ,கடலூர் ஒ.டி க்கு மீன்,இறால் வாங்க சென்றார்.,நான் 7.00மணி வாக்கில் நல்ல கோழி வாங்க வண்டிப்பாளையம் ரோட்டுக்கு சென்றேன்.,காலையிலேயே மதிய விருந்துக்கு எழிலும்,அம்மாவும் தயாராயினர்.காலை சிற்றுண்டி முடித்துவிட்டு கோயிலுக்கு கிளம்ப தயாரானோம்.நான் அப்பா ஏக்சல் -யை எடுத்து கொண்டேன்,செந்தில் என் வண்டி-"யமகா"வை(என் துணைவி மொழியில் "கட்டை வண்டி")உதைத்த பின் அவர் மனைவி மற்றும் ராஜி ஏறிக்கொண்டனர்.

நான் வழிகாட்டியாக முன்னே சென்றேன்.,முதலில் பாடலீஸ்வரர் கோயிலுக்கு சென்றோம்.,பின்பு திருவந்திபுரம் சென்று தேவநாத பெருமாளை பார்த்தோம்.,கோயிலை விட்டு வரும் போது மணி 12.00.,கொடுமையான வெயில்.,

நல்ல படியாக வீடு வந்து சேர்ந்தோம்.,வீட்டில் நுழைந்தவுடன் ஒரே வாசம்,அருணா ,எழிலுடன் சேர்ந்து சமையலில் இறங்கினார்.நாங்கள் போன வருடம் தஞ்சாவூர் சென்ற போது அறுசுவை விருந்து படைத்தவர் அருணா.

சரியாக இரண்டு மணியளவில் சாப்பிட்டோம்.,அருமையாக சமைத்திருந்தனர்.,(அம்மா,எழில் மற்றும் அருணா-வுக்கு நன்றி)சாப்பிட்டு சிறு தூக்கம் போட்டோம்.,
நான்கு மணிக்கு தஞ்சை செல்ல புறப்பட்டனர்., நானும்,முகிலும் பேருந்து நிலையம் சென்று வழி அனுப்பி வைத்தோம்.

ராஜி கையாட்டிக் கொண்டிருக்கும் போதே பேருந்து புறப்பட்டது.

இனிமையான இரண்டு நாட்கள்,இனிமையான மனிதர்களால் மனதில் இடம் பிடித்தது.

துபாய்-வீரச் சீன தொழிலாளர்கள்!

Category :

அரபு நாடுகளில் நிறைய தனியார் நிறுவனங்கள் சரியான
முறையில் சம்பளம் தருவதில்லை என கேள்வி பட்டுருப்பீர்கள்;
இந்தியர்கள்,நேபாளிகள் மற்றும் பாகிஸ்தானியர் போராடுவார்கள்,
ஆனால் தூதரக ஆதரவு இன்மையால் தோல்வி அடைவார்கள்.
அல்லது நாட்டை விட்டு துரத்தப்படுவார்கள்.,

ஒரு முறை நேபாளிகள் வேலைநிறுத்தம் செய்து வெற்றியும் பெற்றார்கள்.,

பாருங்கள் சீனரின் துணிவை.,
முழுச்செய்தி-க்கு கீழே.,,

கடலூரின் அழுக்கு சில்வர் பீச்!

Category :

சில்வர் ( வெள்ளி)கடற்கரையில்!

விடுமுறையில் தங்கைகளின் குழந்தைகளை அழைத்துக் கொண்டு,தேவனாம்பட்டினம்
கடற்கரைக்கு குடும்பத்துடன் சென்றோம்.நிறைய கூட்டம்.,அலை மோதியது.

இப்போதெல்லாம் சில்வர் (தமிழில் வெள்ளி)கடற்கரையில் நிறைய கடைகள்,அதிகமாக தின்பண்ட கடைகள்.மகளிர் சுய உதவி குழுக்களும்,மாவட்ட ஆட்சியரின் ஒத்துழைப்பினால் நிறைய கடைகள் வைத்துள்ளனர்.

கடலை கண்டவுடன் அனைத்து சிறுவர்களும் ஒடி காலை நனைத்தனர்,ஓட்டம்,ஆட்டம்
என பெரியவர்களுக்கு''டிமிக்கி''கொடுத்தனர்.மணலில் புரண்டனர்,நான் மிகவும் ரசித்தேன்,எவ்வளவு அழுக்காக்க முடியுமோ,அவ்வளவு ஆக்கினர் ஆடைகளை.

பின்னர் ஐஸ் க்ரிம் (தமிழாக்கினால் துப்புவார்கள்)சாப்பிட்டோம்.,திரும்பவும் விளையாட்டு.,சிறிது நேரம் கழிந்தது,அடம் பிடித்தனர்,சுண்டல் வேண்டுமென்று.,
பட்டானி சுண்டலை தேர்வுசெய்தனர்.இப்போது தான் தலைப்பை நினைவுக்கு
கொண்டுவரவேண்டும்.

சுண்டலை காலி செய்துவிட்டு காகிதத்தை தூக்கி எறிந்தனர்.,அம்மா,மனைவி,தங்கைகள் மற்றும் குழந்தைகள்...யாருமே சில அடி தொலைவில் குப்பை தொட்டிகளுடன் பிறந்த
குரங்கையோ,முயலையோ கண்டு கொள்ளவில்லை.நான், அவர்கள் போட்ட குப்பைகளை குரங்கிடம் போட்டேன்.,பின்னர் கடிந்தும் கொண்டேன்,நம்மூர் பீச்-ஐ நாம் சுத்தமாக வைத்திருக்காவிட்டால்,அசிங்கம் நமக்குத்தானே என்றேன்.,யாரும் காதில் கேட்டதாக தெரியவில்லை.

இப்படித்தான் அழகிய கடற்கரை அசிங்கமாக ஆகிறது.அடுத்த முறை தான் பார்க்கவேண்டும் என் குடும்பத்தினரை.,

ஆகவே என் இனிய கடலூர் உறவினர்களே,நாமும் கடலூரை ,கடற்கரை-யை சுத்தமாக்கி பாண்டிச்சேரி வரும் சுற்றுலா பயணிகளை கவரலாமே!இதனால் நம்
பொருளாதாரம்,சிறிதேனும் உயருமல்லவா!

வீட்டில்கூட இப்படிதான்,குப்பைகளை போட்டுவிட்டு பெறுக்குவது., எங்கள் வீட்டு பிளாஸ்டிக் குப்பைதொட்டி காத்து கொண்டிருக்கிறது என்று என் மேல் குப்பை விழுமென.?.

கடைசி வரி:(அட இலவசந்தாங்க)

  • சுத்தம் சோறு போடும்,
  • அசுத்தம் சேறு போடும்!

நான் என் கணினி-யில் கூட குப்பையை போடுவது இல்லை.அதுபோல் நீங்களும்
தமிழ்மணத்தில் குப்பையை போடாதீர்கள்.(மன்னியுங்கள் இந்த குப்பையை போட்டதற்கு)

மக்கள் தொண்டன் திரு.ககன் தீப்சிங்பேடி இ.ஆ.ப

Category :


உண்மையான மக்கள் தொண்டன் திரு.ககன் தீப்சிங்பேடி இ.ஆ.ப


நீண்ட வருடங்களுக்குப் பின் கடலூர் , உண்மையான மக்கள் பணியாளனை
திரு.ககன் தீப்சிங்பேடி மூலமாக பெற்றுள்ளது.

ஒரு மாவட்ட ஆட்சியர் எவ்வாறெல்லாம் மக்களுடன் பினைந்து பணியாற்றி அவர்களின் வாழ்க்கையின் வெற்றிக்கு உதவமுடியும் என்பதற்கு திரு.பேடி அவர்களே முன்மாதிரி;

கடலூர் மாவட்ட ஆட்சியரின் (கலெக்டர்) சாதனைகளில் சில,

  • சுனாமி பேரலை தாக்கியபொது,மனிதன் செய்த பணி இன்னும் பாதித்கப்பட்ட மக்கசொல்ல கேட்கலாம்.வெள்ளம் வந்து சாலைகள்(ரோடு) அறுத்துகொண்ட போது,ஜெ.சி.பி வாகனம் மூலம் சென்று மக்களை சந்தித்து குறையை சரி செய்தது.
  • கம்மியம்பேட்டை பாலம் அமைத்து ,புறவழிச் சாலை ஏற்படுத்திக் கொடுத்தது.
  • கடலூரின் பாழடைந்த பூங்காவை ,நந்தவனமாக்கி அதில் சிறுவர் பூங்காவை அமைத்து குழந்தைகளின் பாராட்டு மழையில் இப்போதும் நனைபவர்.
  • தேவணாம்பட்டினம் கடற்கரை (சில்வர் பீச்)-யை அழகு படுத்தி,அங்கே சுய உதவி குழுவினருக்கு சுயதொழிலையும் ஏற்படுத்தி கொடுத்தவர்.இப்போதெல்லாம் விடுமுறை நாட்களில் மக்கள் கடலையும் பார்க்க வழி தந்தவர்.
  • முந்தைய ஆட்சியில் சிறந்த ஆட்சியர் என பரிசையும் பெற்றவர்,ஆட்சி மாறிய போது கூட இவரை மாற்றாமல் இருந்ததே,இவரின் சாதனைக்கு சான்று எனலாம்.
  • கடலூர் மாவட்டத்திற்கு இவர் வந்து மூன்றறை ஆண்டுகள் கழிந்தும் மக்களே கடன் என உழைப்பவர்.
  • 2006 நாட்காட்டி-யில் (காலண்டரில்) குடியரசு தலைவர் திரு.கலாமுக்கு போட்டியாக இடம் பெற்றவர்.நிறைய வணிக நிறுவனங்கள் திரு.பேடி- யின் புகைப்படத்தை தங்கள் நிறுவன நாட்காட்டியில் இட்டு பெருமை சேர்த்தனர்.
இவரின் சொந்த தகவல்கள்;

1.ஒரு மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள்
2.அடிப்படையில் ஒரு இன்சினியர்-பாட்டியாலா தாபர் பொறியியல் கல்லூரியில் படித்தவர்
3.தமிழிலே பேச முயல்பவர்
4.இங்கு வருவதற்கு முன் கன்னியாகுமரி மாவட்டத்தில் ,ஆட்சியராக இருந்து பெரும் பரபரப்பாய் பேசப்பட்டவர்.மக்களின் பேரன்பையும்,பேராதரவையும் பெற்றவர்.

கடைசி வரி:(அட ....இலவசந்தாங்க!)

இவரிடம் இருந்து அரசாங்க ஊழியர்கள் நிறைய பாடம் படிக்கலாம்.(மனமிருந்தால்)






அடேங்கப்பா,,,,பாண்டிச்சேரி-க்கு விமானம்!

Category :


புதுவை மக்கள்(பணம் படைத்தவர்கள்) இனி சென்னைக்கு தினமும்
விமானத்தில் பறக்கலாம்.விமான சேவையை நடத்த ஜாக்சன்(Jagson Airlines)
ஏர்லைன்ஸ் முன்வந்துள்ளது.கூடுதலாக பெங்களூருக்கும்,திருப்பதி-க்கும்
கூட பயணம் செய்யலாம்.

கடலூர்காரனான நான் எப்படி,பயணம் செய்யமுடியும்.?,கடலூருக்கு யாராவது
விமானம் விட்டால் நானும் பயணம் செய்ய ஏதுவாக இருக்கும்.கடலூரை முன்னேற விடாமல் தடுக்கும்,பாண்டிச்சேரியை நாம் எப்படி எதிர்கொள்வது?கடலூர் வலைப்பதிவர்களே,ஆலோசனை-யை அள்ளி விடுங்கள்.

ஜாக்சன் ஏர்லைன்ஸ்-புதுடில்லி-யை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.முக்கியமாக அவர்கள் இயக்க இருக்கும் விமானம்,"டோர்னியர்- 228'',(DORNIER 228)14முதல்16 பேர் வரை பயணம் செய்யலாம்,டோர்னியரை-தயாரிப்பது நம்ம பெங்களூர் எச்.ஏ.ல் (HAL)தான்.
விமானத்தின் மாதிரி படம் தான் மேலே உள்ளது,,


கட்டணம் எவ்வளவு தெரியுமா?
பாண்டிச்சேரி- சென்னை-ரூ.1500(பேருந்துக்கு,அதாங்க பஸ்-க்கு ரூ.46/தான்.)
பாண்டிச்சேரி-பெங்களூர்-ரூ.2400
பாண்டிச்சேரி-திருப்பதி-ரூ.2400

பாண்டிச்சேரி மக்களே மேலே பறந்து, பறந்து பாரை(!) பாருங்கள்,தண்ணீர் போடாமல்.,
பறந்து பார்த்துட்டு ஒரு பதிலும் போடுங்க.

தமிழ் கவலைக்கிடம்?(சாரி சீரியஸ்)

Category :

இன்றைய ( 02-ஜுன்)ஆங்கில முரசை,மன்னிக்கவும்,தமிழ் முரசு மாலை இதழின் முதல்
பக்கத்தை கண்டு திடுக்கிட்டேன்;
தமிழை கட்டாயமாக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி அடையும் நேரத்தில்,முதல்வர் பங்குதாரராக
இருக்கும் நிறுவனமே தமிழை கேவலப்படுத்துவது,கவலை தரும் செய்தியாகும்.

கீழ் கண்ட வார்த்தைகள், ஒரு செய்தியின் அவலங்கள்.,

1.ராகுல் மகாஜன் சீரியஸ்?-கவலைக்கிடம் என எழுதினால் பாவம் தமிழர்களுக்கு புரியாது பாருங்கள்!
2.செக்ரட்டரி ?-உள்ளே மகாஜனின் செயலாளர் என தப்பி தவறி மறந்து எழுதி இருந்தனர்.
3.ஆஸ்பத்திரி?-பரவாயில்லை,ஆஸ்பத்திரி-யை எல்லோருமே தமிழாக்கிவிட்டோம்,கூடுதலாக தமிழ் மருத்துவமனையையும் "ஆஸ்பத்திரியில் சேர்த்து
விட்டோம்.
4.ஃபுட் பாய்சன்? என அடுக்கிகொண்டு போகலாம்.

வியாபாரம் தான்,நாங்கள் மறுக்கவில்லை.,அதற்காக விற்பனையை மலிவான
வார்த்தை மூலம் காசாக்கும்,உங்களுக்கும் ''தினமலர்''தாளுக்கும் என்ன வேறுபாடு?

தயவு செய்து சிங்கப்பூர் தமிழ்முரசு செய்திதாளை ஒருமுறையேனும் பாருங்கள்.

Tamil valga?

வேண்டுதலுக்கு....

Category :

17-மே-2006 அன்று ,எல்லோரும்(நான்,என் துணைவி,முகில்,அப்பா,அம்மா,மதி,சங்கரி,கோகுல்,நவீன்,ரஞ்சித்) டாடா சுமோ-வில்
அரியலூருக்கு அருகில் உள்ள கலியபெருமாள் கோயிலுக்கு சென்று வந்தோம்.ஆயா(அம்மாவின் அம்மா)குழந்தை பாக்கியத்திற்காக வேண்டிக்கொண்டாராம்.,இத்தனை
வருடம் கழிந்து இப்போது தான் சேர்த்த காசுகளை, எல்லாம் பெருமாளுக்கு நன்றி
கணக்காக்கினார்.,அம்மா ஆயாவின் சார்பாக,

பயணம் இனிமையாக அமைந்தது.

என்னைக்கு வருவீங்க??

Category :

எத்தனை முறை தொலைபேசியில் அழைத்தாலும் என் மனைவிகேட்கும் கேள்வி,இதில் என்ன விசேசம் என்றால் அவருக்கு தெரியும்,நான் என்று திரும்புகிறேன் என்று.,
இன்று அப்பா,அம்மாவிடம் பேசினேன்,மிக்க மகிழ்ச்சியுடன் இருந்தனர்.,மாமாவும்பேசினார்.,மிக்க மகிழ்வுடன் இருந்தார் என நினைக்கிறேன்.,நான் மதிக்கும் மனிதருள்ஒருவர்.
எழிலுக்கு, சண்டை போட நான் அவசியம் தேவை என் நினைக்கிறேன்.இன்னும் ஒரு நாள் தான்....

18ஏப்ரல்2006

Category :

இன்று எழிலிடம் பேசினேன்.,மிக்க மகிழ்ச்சியுடன் இருந்தார்.,அம்மா எங்கே என்று
கேட்டேன்,அதற்கு மேலே போய்விட்டார்கள் என்றாய்.,உனக்கு அவ்வளவு மகிழ்ச்சியா
எழில்?
மற்றபடி நாள் இனிமையாய் கழிந்தது.
-முகு-

புத்தாண்டு தினத்தில்.....

Category :

நேற்று நிறைய நண்பர்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்தைஆங்கிலத்தில் சொல்லியிருந்தனர்.நான் தமிழில் நன்றிதெரிவித்து கொண்டேன்.

எழிலிடம் பேசினேன்,ரொம்ப மகிழ்ச்சியுடன் பேசினார்.,பிறந்த வீட்டுக்கு சென்று வந்ததுஎன நினைக்கிறேன்.எழில் ,கடைசி வரை உன் முகத்தில் மகிழ்ச்சியை மட்டுமே காண விழைகிறேன்,கவலையே படாதே.,நான் இருக்கிறேன்....

அப்பாவிடமும், அம்மாவிடமும் பேசினேன்.,நாள் மகிழ்ச்சியுடன் மறைந்தது.

முதல் பயணம்.....

Category :


அன்பிற்கினியவர்களுக்கு,

வலைப்பூக்களினுள் நுழைகிறேன்....இனி மேல் தான் தெரியும்....நல்ல பூக்களை பயிரிடுவோமா என?முயற்சி செய்கிறேன்...

அன்புடன்,

முகு

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

Category :


அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்,

அன்புடன்,
முகு