சன் டி.வி‍‍‍‍‍-ன் நகல் டி.வி?

Category :

ஆமாம்! போன வாரத்திலிருந்து ஒளிபரப்பாகும்
கலைஞர் தொலைக்காட்சி,தமிழகத்தை கலக்கும் என எதிர்பார்த்தால்
அது சன்‍‍-ன் ஜெராக்ஸ் காப்பியாக பிற‌ந்துள்ளது.

அப்பட்டமான சினிமா மூலதனங்கள், அசிங்கமான
சீரியல்கள் (பெயர் நெடுந்தொடர்....தமிழாக்கி இருக்கிறார்கள்).
மற்றபடி இது ஒரு முழுமையான மற்றுமொரு மசாலா டிவி.
தமிழனுக்கு சோறு கிடைக்கிறதோ இல்லையோ,, வித,விதமான‌
வெட்டி சேனல்களுக்கு குறை இல்லாமல் கிடைக்கிறது.

தமிழகம் இந்த சேனல் புற்றுநோயிடமிருந்து மீள வழியே இல்லை
என்றே தோன்றுகிறது.

மூட்டைப்பூச்சிக்கு பயந்து...?!

Category :

வீட்டைக் கொளுத்த‌லாமா?...

செல்ல(லா) ப‌திவ‌ர்க‌ளே என்ன‌
ஆயிற்று உங்க‌ளுக்கு....சில‌ வார‌ங்க‌ளாக‌ த‌மிழ்ம‌ண‌ம் அழுகிய‌
ம‌ண‌த்துட‌ன் வாழ்ந்து கொண்டிருப்ப‌து அனைவ‌ருக்கும் தெரியும்.

நிறைய‌ பேர் வேடிக்கை பார்த்தோம்,ஒப்புக்கொள்கிறோம்.,
ப‌திவைத்தாண்டி ஒரு வார்த்தைப் போர் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌தினால்
நிறைய‌ பேர் அமைதி காத்திருக்க‌க் கூடும்.நிறைய‌ பேர் காய‌ப்
ப‌டாத‌தினாலும் அமைதியாய் இருந்திருக்க‌க் கூடும்.

இப்போது என்ன ''குடி'' முழுகிப் போய்விட்ட‌து...விடைதான்
பெற்றாகிவிட்ட‌தே...பின் ஏன் விடை பெற‌வேண்டும் ப‌திவுல‌கிலிருந்து?.
வாருங்க‌ள் ச‌கோத‌ர‌,ச‌கோத‌ரிக‌ளே ப‌திவைப் போடுங்க‌ள்...படிப்ப‌வ‌ர்
ப‌டிக்க‌ட்டும்....படிக்காத‌வ‌ர் பார்க்க‌ட்டும்...?

ந‌ம் ஊரிலே ,ப‌க்க‌த்திலேயே ''முள்ள‌மாரி,முடிச்ச‌விக்கி,அயோக்கிய‌ன்,
விப‌ச்சார‌ன்,விப‌ச்சாரி,மென்பொருள் திருட‌ன்,பெண்பொருள் திருட‌ன்,
அர‌சிய‌ல் திருட‌ன் போன்றோருட‌ன் வாழ‌வில்லையா நாம்.இன்னும்
சில‌ கொடிய‌ வில‌ங்குக‌ள் கூட‌ வாழ‌ப் ப‌ழ‌கிக் கொண்டுள்ளோம்.
அதுமாதிரி இந்த‌ இணைய‌த்திலும் சில ''ம‌ன‌ நோயாளிகள்'' இருக்கின்ற‌ன‌ர்.
எங்கேயாவ‌து த‌ன் உள‌ர‌லை அவ‌ர்கள் கொட்டி விட்டுப் போக‌ட்டுமே.....

ப‌டித்த‌வ‌ன் என‌க் கூறிக்கொள்வப‌வ‌ன் எத்த‌னை பேர் ப‌ண்புட‌ன்
ந‌ட‌ந்து கொள்கிறான்...இதில் பெண்க‌ளும் விதிவில‌க்க‌ல்ல‌...
நாம் அன்றாடம் பார்க்காத‌,கேட்காத‌ அசிங்க‌ங்க‌ளா....இந்த‌ வ‌லைப் பூக்க‌ளில்
புதிதாக‌ பார்க்கிறோம்..பின் ஏன் இங்கே ம‌ட்டும் கூச்ச‌ல்?...,

சென்னை ப‌திவ‌ர் ப‌ட்ட‌றை‍-2007 க்கு சென்றுவ‌ந்த‌ பின் தான் புரிந்த‌து....
நிறைய‌ த‌மிழ்ம‌ண‌ ப‌திவ‌ர்க‌ள் குழுவாக‌ செய‌ல்ப‌ட்ட‌து...அத‌னால் ''அல்ல‌ல்''
ப‌டுவ‌து.நிறைய‌ ப‌திவ‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தொலைபேசி,மின்னஞ்ச‌ல்,சாட்,
போன்ற‌ ''முத‌லைக்குள்'' மாட்டிக் கொண்டு இருந்த‌தை.இதுதான் அடுத்தவ‌னை காட்டிக் கொடுக்க‌ ஏதுவாக‌ இருந்திருக்கும்.

இந்த‌ ''குழு ச‌க்தி'' தான்....எல்லா பிர‌ச்ச‌னைக‌ளுக்கும் கார‌ண‌ம் என‌ நினைக்கிறேன்.க‌ருத்து திணிப்புக்கும்,அடாவ‌டிக்கும் இதுதான் ''தீ''யாக‌
இருந்திருக்கும்.மாற்றுக் க‌ருத்தை அசிங்க‌மாக‌ ஆராய‌ தூண்டிய‌து...அசிங்க‌த்தை கிள‌ர‌ தூண்டிய‌து இந்த‌ தேவைய‌ற்ற‌ உற‌வுக‌ள் தான் என‌ நினைக்கிறேன்.
இந்த‌ கூட்ட‌த்தின‌ர் ஒரு கால‌த்தில் ஒட்டி,உற‌வாடியும் வ‌ந்துள்ள‌ன‌ர்.

ஆக‌வே த‌மிழ் வ‌லைப்பூக்க‌ளின் உயிர்க‌ளே வாருங்க‌ள்., ப‌ழ‌தை ம‌ற‌ப்போம்.
''புதிய‌ ப‌யிரிடுவோம்....???

க‌டைசி வெறி:

இந்த‌ வ‌லைபூக்க‌ளினால் அடித்த‌ட்டு ம‌க்க‌ளுக்கு ஒரு ப‌ய‌ணும் இல்லை.ஆனால் ந‌ம் அனுப‌வ‌ங்க‌ள் ப‌ல‌ இளைஞ‌ர்க‌ளுக்கு
பாடமாகவாவது ப‌ய‌ன்ப‌ட்டாலே
பெரிய‌ வெற்றி தான்.

த‌மிழில் ஒரு இர‌ண்டாயிர‌ம் வ‌லைபூக்க‌ளில் ,சில‌ நூறுதான் உயிரோடு
இருக்கும் என‌ நினைக்கிறேன்.இந்த‌ நூறில் ஒரு இருப‌து பேர் கும்மி அல்ல‌து
குழு ப‌திவ‌ர்க‌ள்,புதிதாக‌ வ‌ந்த‌வ‌ர்க‌ள் முக‌ப்பை பார்த்த‌வுட‌ன் ஓட்ட‌ம்
பிடித்தோர் எத்த‌னை பேரோ???

ச‌கோத‌ர‌ ,ச‌கோத‌ரிக‌ளே த‌மிழுக்காவாவது, நாம் ந‌ம் ப‌ய‌ண‌த்தை
தொட‌ர‌லாமே...!!!

''வ‌லைப்பூக்க‌ள் வாழ‌ட்டும்
ந‌றும‌ண‌ம் இல்லையென்றாலும்,
வ‌ச‌ந்த‌ம் ஒரு நாள் வீசும்
அத‌ன் வாழ்க்கையை மாற்ற‌?"

மகாநடிகனும்,பெரியார் மோதிரமும்...?

Category :

நடிகர் சத்தியராஜ்-‍க்கு பெரியார் மோதிரத்தை திராவிடர் கழக
தலைவர் வீரமணி அளித்தாலும் அளித்தார்...அதுபற்றி புளகாங்கிதம் அடைகிறார்கள் சிலர்.உண்மையிலேயே பெரியார் கொள்கைகளுக்கு நேர் மாறானது...இந்த சங்கதிகள்...

பெரியார் அணிந்திருந்த மோதிரத்தை,அடுத்தவர் அணிவதால் என்ன‌ ப‌ய‌ன்? மேலும் இது ப‌குத்த‌றிவிற்கே சவாலான செயலும் கூட‌.சாய்பாபா ப‌ட‌ம் போட்ட‌ மோதிர‌ம் அணிவ‌து மாதிரி.....ஒரு ச‌முதாய‌ சீர்திருத்த‌ ந‌டிக‌னை,நாய‌க‌னை பாராட்ட‌,எத்த‌னையோ வ‌ழிக‌ள் உள்ள‌ன‌வே.அய்யா வீர‌ம‌ணி அவ‌ர்க‌ளே ஏன் இந்த‌ த‌டுமாற்ற‌ம்...


என்ன‌ ஆயிற்று...இன‌ முர‌சு ச‌த்திய‌ராஜ்-க்கு....பெரியாராக‌ ந‌டித்த‌த‌ற்காக‌ அளித்தார்க‌ளாம்.இவ‌ர் ஏற்றுக் கொண்டாராம்....அய்யா,இந்த‌மாதிரி மூடப் பழக்கங்களை,பைத்திய‌க்கார‌த் த‌ன‌த்தைத்தானே வாழ்நாள் முழுதும்
எதிர்த்தார் பெரியார்.

ச‌த்தியராஜ் அவ‌ர்க‌ளின் பேச்சினை ஒலிநாடா மூல‌ம் கேட்டு இருக்கிறேன்.மிக‌வும் அருமையான மற்றும் சிந்த‌னையை த‌ட்டி எழுப்பும் பேச்சுக‌ள் அவை.

அனைவ‌ருக்கும் புரியும்ப‌டியான‌,அதே நேர‌த்தில் சுருக்க‌மான‌ பேச்சு ம‌கா ந‌டிக‌னுடைய‌து.அவ‌ர் நிச்ச‌ய‌மாக‌ ப‌குத்த‌றிவை த‌மிழ் ம‌க்க‌ளுக்கு மீண்டும் ஊட்ட‌,பெரும் ப‌ங்கு வ‌கிக்க‌ முடியும்.செய்வாரா தெரிய‌வில்லை....?

கடைசி வெறி:


1.போன‌ வார‌ம் வேலூர்‍ ப‌க்க‌த்தில் ஒரு த‌ங்க‌ கோவில் (300 கோடியில்)க‌ட்டியுள்ளார் ஒரு சாமியார்.அவ‌ர் அந்த‌ த‌ங்க‌த்தை ரிச‌ர்வ் பேங்க் ஆப் இந்தியா(RBI) மூல‌மாக வாங்கினாராம்.அந்த‌ இட‌ம் நூறு ஏக்க‌ர் நில‌த்தில் அமைந்துள்ள‌தாம்.அந்த‌ கோயிலுக்கு கும்பாபிசேக‌ம் ந‌ட‌ந்த‌ போது,பொதும‌க்க‌ளுக்கு அனும‌தி இல்லையாம்.....எல்லாம் வெள்ளை கார‌ணுக்குதானாம்.

என்ன‌மோ ந‌ட‌க்கிறது மக்களே.,...உஷார்....உஷார்....

2.சென்னை கபாலீச்வ‌ர‌ர் கோயில் கோபுர‌த்தை இடி தாக்கிய‌தாம்....கோபுர‌ப‌ட‌த்தை வைத்து ஒரு "பால‌ஸ்தான‌ பூஜை" செய்தார்க‌ளாம்....எப்பா பூஜையை எப்ப வேணாலும் நடத்தலாம்...

மொத‌ல்ல‌ இடி தாங்கி வைங்க‌....மக்கள காப்பாத்துங்க...
(ப‌ட‌ம் சுட்ட‌து:மாலைச்சுட‌ர்)

சொந்த செலவில் சூனியம்?

Category :

அப்படித் தான் தெரிகிறது.தெரியாத்தனமா "சிவாஜி" திரைப்
படத்துக்கு என் நாலரை வயது மகன் மற்றும் நான்கு வயதுடைய‌
தங்கை மகனை அழைத்து போனது தவறான முடிவோ எனத்
தோன்றுகிறது.

ஊரும்,ஊடக உலகமும் "சிவாஜி,சிவாஜி.....வாஜி,வாஜி,பாவ்ஜி...என‌
கூச்சல் போட்டதால் ஒரு ஆசையில் போய்விட்டோம்.
இப்படம் தான் அந்த இரு சிறுவர்களுக்குமே முதல் திரைப்படம்.இருவ‌ரும்
தூங்காம‌ல் பார்த்துகொண்டிருந்த‌து ஆச்ச‌ரிய‌மாக‌வும் இருந்த‌து.
அடுத்த‌ நாள் முத‌ல் ஆர‌ம்ப‌மான‌து...."சிங்க‌ம் சிங்கிளாத்தான் வ‌ரும்".....

இப்போது தான் வினையே ஆர‌ம்ப‌மாகியுள்ள‌து.சிறுவ‌ர்க‌ளின் போக்கு
தாறு,மாறாக‌ உள்ள‌து.கால்க‌ள் தானாக‌ உய‌ருகின்றன‌...அவ்வ‌ப்போது
க‌ட்டிலிலிருந்து ப‌ற‌க்க‌,விழுகிறார்க‌ள்.

கூட‌வே தொலைக்காட்சியும்(இல்லை டி.வி) திரும்ப‌,திரும்ப‌ இந்த‌
ப‌ட‌த்தின் பாட‌ல்க‌ளையும்,காட்சியையும் காட்டி தொந்த‌ர‌வு செய்த‌தால்
அவ‌ர்க‌ளின் பார்வை ர‌ஜினியின் மேல் ப‌ட்டு விட்ட‌து.

இதையெல்லாவ‌ற்றையும் விட கொடுமையான‌து என்ன‌வென்றால்,உன் பெய‌ர் என்ன‌ என‌ யாராவ‌து என் மகனிடம் கேட்டால்''ர‌ஜினி" என‌ கூறுவ‌து தான்.ப‌ள்ளிக்கூட‌த்தில் போய் விசாரித்தோம்...அங்கு த‌ன் பெய‌ரை ஒழுங்காக‌ கூறுகிறானாம்.அங்கு அட‌க்க‌மாக‌ உள்ளானாம்.

வீட்டுக்கு வ‌ந்த‌வுட‌ன் வேலையை ஆர‌ம்பித்துவிடுகிறான்.....குதிப்ப‌து,தாவுவ‌து
என‌ப் போன்ற‌ சேட்டைக‌ள்....நானும் விள‌க்குகிறேன்....மேலும் ரஜினி சன்டை போடமாட்டார்,அவருக்கு ''டூப்'' இருப்பார்கள் எனத் திரும்ப,திரும்ப கூறவேண்டியுள்ளது.சினிமாவில் குதிப்ப‌து...
சும்மா என்று....ப‌ஞ்சு மெத்தை‌யில் தான் அவ‌ர்க‌ள் குதிப்பார்க‌ள்...நாம் அது
மாதிரி குதித்தால் கால் உடைந்து விடும் என்று...

க‌ண் கூடாக‌ தெரிந்த‌து,குழ‌ந்தைக‌ள் எவ்வாறு ஊட‌க‌ சாத‌ன‌ங்க‌ளால்
மாற்ற‌ப்ப‌டுகிறார்க‌ள் என்ப‌தை....!

டிஜிடல் பேனரும்,அடங்காத சண்டையும்....

Category :

இப்போதெல்லாம் கடலூரை சுற்றி வளைத்திருப்பது...
பாழாய்ப்போன டிஜிடல் பேனர்கள் தான்...

நேற்று(18-08-2007) கூட பா.ம.க வும் ,விடுதலை சிறுத்தைகளும்
அடித்து கொண்டது அநாகரீகத்தின் உச்சகட்டம்.பாவம்
அப்பாவி தொண்டர்களின் வாழ்க்கையை அழிக்கும்
இந்த சண்டையை விட்டால் எத்தனையோ குடும்பங்கள்
மகிழ்ச்சி அடையும்.

அதுவும் பேனர் என்றால் 10x10 அல்ல....10 அடிக்கு 100அடி
அகலத்தில் கூட அமைக்கிறார்கள்.இதில் அவர்கள் பொதும‌க்க‌ளை
நினைத்துக் கூட‌ பார்ப்ப‌தில்லை.பேருந்து நிறுத்த‌ம் கூட‌ ம‌றைந்து
போகும் அள‌வுக்கு,ஒரு நோயாகிப் போயுள்ள‌து இந்த‌ மோக‌ம்.

க‌ல்யாண‌ம் முத‌ல் காதுகுத்த‌ல் வ‌ரை இந்த‌ வியாதி ப‌ட‌ர்ந்துள்ள‌து.
டிஜிட‌ல் பேன‌ர் இல்லாத‌ விழா,ஒரு விழாவாக‌வே இல்லை என்ற‌
நிலை ஏற்ப‌ட்டுவிட்ட‌து.

அர‌சிய‌ல் க‌ட்சி ச‌கோத‌ர‌ர்க‌ளே ம‌க்க‌ளை ப‌ற்றி கொஞ்ச‌ம்
நினைப்போம்.ஒன்றும் செய்யாவிட்டால் கூட‌.

உதாரணத்திற்கு,இரண்டு மாதங்களுக்கு முன் வடலூர் சென்ற போது வடலூரே காணாமல் போனது.சுமார் 200 டிஜிடல் பேனர்கள்
முக்கிய நான்கு முனை சாலையையே அடைத்திருந்தன.
வைக்கப்பட்டது தமிழக‌அமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை வரவேற்க...அவர் வந்து மூன்று நாட்கள் கழிந்தும்
அப்படியே தான் டிஜிடல் பேனர்கள் வரவேற்றுக் கொண்டிருந்தன.

காவல்துறை தான் ஏதாவது செய்ய வேண்டும் .

பாலைவனப் ப‌ரிதாப‌ங்க‌ள்?‍

Category :

சில‌ தினங்களுக்கு முன் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த‌
இளைஞரை சந்திக்க நேர்ந்தது.அவர் துபாயிலிருந்து திரும்பி
இருந்தார்,(அரசின் கருணை மூலம்)-amnesty அம்னெஸ்டி மூலம்.

த‌ம்பியின் க‌தை கேட்டு ம‌ன‌தே க‌ன‌த்த‌து.என்ன‌ செய்வ‌து ஒரு ப‌க்க‌ம்
சாப்ட்வேர்(software) மூல‌ம் ந‌ம் இளைஞ‌ர்க‌ள் ப‌ண‌த்தில் மித‌ப்ப‌தும்
ஞாப‌கம் வ‌ந்த‌து.

த‌ம்பி ப‌த்தாவ‌து வ‌ரை ப‌டித்துள்ளார்...வெளிநாட்டு மோக‌த்தினால்
ம‌ட்டும் இல்லாம‌ல் த‌ன் குடும்ப‌ நிலையை மாற்ற‌வும் நினைத்து
ஒரு பெரும் தொகையை ஏஜென்டு‍க்கு கொடுத்துவிட்டு விமான‌ம்
ஏறியுள்ளார்.

இற‌ங்கிய‌ பின்பு தான் தெரிந்த‌து,அது ஒட்ட‌க‌ கூடார‌ம் என்று.துபாய்
ந‌க‌ரிலிருந்து வெகு தொலைவில் ஆள் அர‌வ‌ம் இன்றி இருந்த‌தாம்.
வேலை புல் தோட்ட‌த்தில் ,புல் அறுத்து ஒட்ட‌க‌த்துக்கு இடுவ‌து.

த‌ன் ஊரில் ,வீட்டில் உள்ள‌ மாட்டுக்கு கூட‌ ஒரு வேளை புல்
போடாத‌வ‌ன்.புது வாழ்க்கை புல்லே ஆன‌து கொடுமையாய் இருந்த‌து.
ஏஜென்ட் ஏமாற்றி இருக்கிறான்.பொறுத்து கொண்டு காசுக்காக‌ ப‌ணி
செய்த‌போது அர‌பி உரிமையாள‌ர் ச‌ம்ப‌ள‌மே கொடுக்காத‌ போது தான்
புரிந்த‌தாம்,அர‌பி நேர்மையான‌ ஆள் அல்ல‌ என்று.

மூன்று அல்ல‌து நான்கு மாதம் ச‌ம்ப‌ள‌மே இல்லையாம்.பின்பு ஒரு மாத‌ம் ச‌ம்ப‌ள‌ம் கிடைத்த‌தாம்.இப்ப‌டி ஒரு வ‌ருட‌ம் த‌ண்ட‌னையை க‌ழித்து,ஒரு நாள் சொல்லிக் கொள்ளாம‌ல் வெளியேறி துபாய் ந‌க‌ருக்கு சென்றிருக்கிறார்.

அங்கே வேறு ஒரு த‌மிழ் ந‌ண்ப‌ரின் உத‌வியுட‌ன் ஒரு கார் ஒர்க்ஷாப்‍‍‍-பில்
சேர்ந்திருக்கிறார்.இது முறை த‌வ‌றிய(illegal) பணி தான் என்ன‌ செய்வ‌து...குடும்ப‌த்தை காப்பாற்ற‌ வேண்டும்,முக்கிய‌மாக‌ வாங்கிய‌ க‌ட‌னுக்கு வட்டி க‌ட்டியாக‌ வேண்டும்.வெளியே த‌லையே காட்டாம‌ல் இரு வ‌ருட‌ங்க‌ள் வேலை செய்திருக்கிறார்,கிடைக்கும் ப‌ண‌த்தை தெரிந்த‌வ‌ர்க‌ள் மூல‌மாக‌ வீட்டுக்கும் அனுப்பி இருக்கிறார்.

இத‌னிடையே அரசு, விசிட் விசாவில் வ‌ந்து திரும்பாத‌வ‌ர்க‌ளுக்கும்,வேறு
வேலைக்கு த‌ப்பி ஓடிய‌வ‌ர்க‌ளுக்கும் க‌ருணை அடிப்ப‌டையில் த‌ங்க‌ள் நாடு
திரும்ப‌லாம் என‌ அறிவித்த‌து.அந்த‌ந்த‌ நாட்டு தூத‌ர‌க‌ங்க‌ள் மூல‌மாக‌ திருப்பி அனுப்ப‌ ஏற்பாடு செய்த‌து.விமான‌ டிக்கெட் எடுக்க‌ வ‌ழியில்லாத‌வ‌ர்க‌ளுக்கு
இந்திய‌ சேவை அமைப்புக‌ள் உத‌வி செய்த‌ன‌.

த‌ம்பி இதை அறிந்து இந்திய‌ தூத‌ர‌க‌த்தில் அடைக்க‌ல‌ம் ஆகியிருக்கிறார்.
அங்கு இருந்த‌ அதிகாரிக‌ள் இவ‌ர் க‌தையை கேட்டு உத‌வி செய்வ‌தாய் ஆறுதல் வார்த்தை கூறியிருக்கின்ற‌ன‌ர்.புல் தோட்ட‌த்து முத‌லாளி அர‌பியிட‌ம் பாஸ்போர்ட் மாட்டிக்கொண்ட‌தால்,சிர‌ம‌ப்ப‌ட்டு அர‌சின் ஆத‌ர‌வினால் த‌மிழ்நாடு வ‌ந்து சேர்ந்துள்ளார்.

கடைசியாக, இனி என்ன‌ செய்ய‌ப்போகிறீர்க‌ள் என‌க் கேட்டேன்.ப‌திலைக் கேட்டு திடுக்கிடத் தான் முடிந்த‌து.

''த‌டைக்கால‌ம்(Ban period) முடிந்த‌வுட‌ன் ஒரு வ‌ருட‌ம் க‌ழித்து மீண்டும்
துபாய் செல்வேன்.''

பட்டய கிளப்பிய பட்டறை!

Category :

ஆமாம்!சென்னை பதிவர் பட்டறை-2007 மிகச் சிறப்பான முறையில்
நடந்தேறியுள்ளது.

இதன் அடுத்த சிறப்பு என்னவென்றால் பங்கேற்பாளர்களும்,
தன்னார்வலர்களும் ஆக்க பூர்வமான முறையில் விவாதித்தது மற்றும்
செயல்முறை மூலம் சந்தேகங்களை களைந்தது....இந்த நிகழ்வு ஒரு
இனிய "வரப்பிரசாதம்" என்றே கூறலாம்.

என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த முன்னாள் கல்லூரி முதல்வர்,
ஒரு மாணவன் மாதிரி தமிழ் வலைப்பதிவு பற்றி கற்க ஆர்வமாய்
இருந்தார்.செயல்முறை பயிற்சியின் குறிப்புக‌ளை தன் சொந்த குறிப்பேட்டில்
உடனுக்குடன் பதிந்தது ஆச்சரியமாக இருந்தது.அவர் காரைக்கால்‍-லிருந்து
வ‌ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே மாதிரி புது வ‌லைப்ப‌திவ‌ர்க‌ள் செய்முறை ப‌யிற்சியில் மிக‌
ஆர்வ‌த்துட‌ன் ப‌ங்கேற்ற‌தை காண‌ முடிந்த‌து.

முக்கிய‌மாக எந் நிக‌ழ்விலும் தொய்வே இட‌ம் பெறாம‌ல் மாலை 5.30 ம‌ணி வ‌ரை அனைவ‌‌ரும் ப‌ங்கேற்ற‌து ஒரு விய‌ப்பான‌ நிக‌ழ்வே.
ப‌திவ‌ர்க‌ளின் ஆர்வ‌ம்,உறுதி போன்ற கூறுகள் தமிழ் எப்போதும் த‌லை நிமிர்ந்தே வாழும் என‌ க‌ர்வ‌த்துட‌ன் கூறிக் கொள்ள‌லாம்.

க‌டைசியாக‌ இந்த‌ ப‌ட்ட‌றை‍-யை சிற‌ப்பாக‌ ந‌ட‌த்தி முடித்த‌ மா.சிவ‌குமார்,
விக்கி,பால‌பார‌தி போறோர்க்கும் ஏனைய‌ தோழ‌ர்,தோழிய‌ருக்கும்
ந‌ன்றிக‌ள் ப‌ல‌....

ப‌ட்ட‌றைக்கு பேருத‌வி செய்த‌ சென்னை ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ த‌மிழ்த் துறைக்கும்,ஆத‌ர‌வு அளித்த‌ ஹெட்வே ப்ரொபெர்டீஸ்(Headway Properties),லின‌ஸ் அகாட‌மி(Lynus Academy),சிஃபி(sify),த‌மிழ்ம‌ண‌ம்,கிழ‌க்கு ப‌திப்ப‌க‌ம் ம‌ற்றும் ச‌ற்றுமுன் குழும‌த்திற்கும் நெஞ்சார்ந்த‌ நன்றி.

திருவாளர் திருமிதி...கேலிக் கூத்து!

Category :

அபத்தங்கள்,அசிங்கங்கள் அரங்கேறும் ஒரு இடம்.
சன் டி.வி‍ யில் "சனி" யில் நடைபெறும் ஒரு
நிகழ்ச்சி.

கணவன்,மனைவி ஜோடியாக பங்கு பெறும் ஒரு
பரிசுப் போட்டி நிகழ்ச்சி.ஆனால் இங்கு சமீப காலமாக‌
அசிங்கங்களே அரங்கேறுகின்றன.

ஆண்கள் "நைட்டி"யை போட்டுக் கொண்டும்,பெண்கள்
"மீசை"யை மாட்டிக் கொண்டும் பால் மாறி ஆடிக்
காட்டுகின்றனர்.இது தான் பெண்கள் முன்னேறி விட்டதாய்
காண்பிக்கும் அங்க அடையாளமோ தெரியவில்லை.?

இதில் வருபவர்களுக்கு இருக்கும் ஒரே குறிக்கோள்...தங்கள்
முகம் திரையில் வர வேண்டும் என்பது தான்.

இந்த கண்றாவியை நான் விரும்பி பார்ப்பது இல்லை...வெம்பி
பார்க்கிறேன்.என் வீட்டினரும் மாங்கு,மாங்கு என பார்ப்பதால்.
என் வீட்டினரை கூட வேறு நல்ல காட்சிக்கு மாற்றும் முயற்சியும்
தோல்வியிலேயே முடிகிறது.அபத்தத்தை ஆண்டு முழுதும்
எப்படி பார்க்கிறார்களோ என தெரியவில்லை.?

ஒன்று மட்டும் நிச்சயம்...சமுதாய அக்கறை அற்ற,
தமிழ் விரோத,"காசை"யே கொள்கை என தொழில் புரியும்
"நம்பர் ஒன் சேனல்"....சன் தொலைக்காட்சி மட்டுமே.
இல்லை இல்லை...சன் டி.வி....

அருள் பெறுவோம்,அம்மன் படம் பார்த்து!

Category :

ஆடி மாதம் பொறந்தாலும்,பொறந்தது இந்த விளம்பர‌
அசிங்கங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
ஆடி மாசத்துல தான் தூள் பறக்கும் இலவசங்கள் பிறக்கும்.ஒன்னு வாங்கனா,இன்னொன்னு இலவசம்;மொட்டை
போட்டா சந்தனம் இலவசம்;அல்வா வாங்கனா ரெண்டு(!) இலவசம்..
இப்படி பலப்பல...

நேற்று(18-07-2007) "ராஜ் டிவி"‍யிலும் ஒரு விளம்பரம்.
''இந்த மாதம் முழுவதும் அம்மன் படங்கள்...
அனைத்து படங்களையும் பார்த்து அம்மன் அருள் பெறுங்கள்''.
என்ன ஏமாற்ற வரிகள் பாருங்கள்?.சாமியை வைத்து வியாபாரம்
செய்வதும் கூட வரையறை இன்றி போய்விட்டது.ஒரு திரைப்படத்தை
பார்த்தால் பார்ப்பவருக்கு அருள் கிடைக்காது,டி.வி நிறுவனத்துக்குத்தான் 'பண' அருள் கிடைக்கும்.

தமிழன் சுய உணர்வை ,அறிவை தொலைத்து ,அருளை மட்டுமே தேடிக் கொண்டிருக்கின்றானோ எனத் தோன்றுகிறது.

விஜயகாந்த்‍ தமிழுக்கு ''நோ''?

Category :

தன்னுடைய 150‍ வது பட பூஜையை,சொந்த‌ இஞ்சினீயரிங் கல்லூரியில் நேற்று நடத்தி இருக்கிறார் கேப்டன்.எந்த ராணுவத்தில் பணிபுரிந்தார்
எனத் தெரியவில்லை(!). படத்தின் பெயர் வித்தகன்.

நான் கடலூரிலிருந்து,சென்னை செல்லும் போதெல்லாம் பார்ப்பேன்,மாமண்டூரில் தன் கல்லூரி வாயிலில் நின்று வரவேற்பார்.(விளம்பர பலகையில் தான்)

தமிழக கல்வி முன்னேறியதோ இல்லையோ,இந்த மாதிரி பகுதி அரசியல்வாதிகள் வாழ்வு முன்னேறி உள்ளது.அங்கு படிக்கும்
மாணவர்களைத் தான் கேட்க வேண்டும்,நோட்டு புத்தகங்கள்,பாடங்களில் கேப்டன் முகம் இருக்கிறதா என‌?.

சரி,விசயத்துக்கு வருவோம்.நேற்று செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போது ஒரு கேள்வி அதிரும்படியாக இருந்ததாம்.

''சிவாஜி" படம் பார்த்தீங்களா?‍‍
அதற்கு தே.மு.தி.க கேப்டன், ''நான் எந்த படமும் பார்ப்பதில்லை.
நல்ல‌ ஆங்கில படங்களை மட்டும் பார்ப்பேன்.''

ஆகா நல்ல வேளை, அவர் நடித்த படத்தை அவரே பார்க்கவில்லை..பார்த்திருந்தால் என்ன ஆயிருக்கும்?.

பாருங்கள் தமிழர்களே...எவ்வளவு திறமையாக ஏமாற்றி பிழைக்கிறார்கள்.இவர்கள் ஆங்கில படம்தான் பார்ப்பார்களாம்.
நாம் தான் இவ‌ர்க‌ள் ந‌டித்த‌ ப‌ட‌த்தை பார்த்து,பார்த்து ஏமாற‌ வேண்டுமாம்.

ஏமாறுவ‌து தான் ந‌ம‌க்கு அல்வா சாப்பிடுவ‌து மாதிரி ஆயிற்றே...வாங்க ''ப‌ழ‌க‌, ப‌ழக'' ஏமாறுவோம்.

மாயாவதி‍யிடம் தோற்ற மு.க + ஜெ.ஜெ!!

Category :

அம்மாடி....சகோதரி மாயாவதி என்ன பாய்ச்சல்.....பாய்ந்திருக்கிறார்.
சில அப்பாவி தொண்டர்கள் புளகாங்கிதம் அடைகிறார்களாம்..
நம்ம‌ ஜாதி பெண்,கோடீஸ்வரி ஆகி விட்டாரே என....

என்ன சாதனை செய்திருக்கிறார்....?அவரின் சொத்து மதிப்பு ரூ.52கோடியாம்.நம்ம ஜெவையும்,கலைஞரையும் ஒரே கல்லில் வீழ்த்தியிருக்கிறார்.இந்த சொத்து விபரத்தை அவரே உத்திர பிரதேச மேலவை தேர்தல் வேட்புமனுவில் தெரிவித்திருக்கிறார்.
மாயாவதி அவர்கள் 2004 மக்களவை தேர்தல் நடந்த போது இருந்த சொத்து மதிப்பு 11 கோடி.ஆனால் இதை 52.5 கோடியாக மாற்றி சாதனை
புரிந்துள்ளார் மாயாவதி....ஆகா என்ன வளர்ச்சி.....உ.பி நன்றாக
முன்னேறி இருப்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.

மாயாவதி சொல்கிறார்..,என் தொண்டர்கள்,நலம் விரும்பிகள் அனுப்பிய‌ பணத்தில் தான் இந்த சொத்துகளை வாங்கினேன்.அவர்கள் என்னை கோடீஸ்வரியாக பார்க்க விரும்புகிறார்கள்.ஆகா...என்ன தத்துவம் புல்லரித்து போகிறது.

சகோதரியே,அடித்தட்டு தொண்டன் அன்றாடங்காச்சியாக இருந்தாலும்...அவனின் பெரிய மனசை பாருங்கள்.அதுவும் வர்த்தக கட்டிடங்களாகவே வாங்கி குவித்துள்ளீர்.நாங்கள் மகிழ்ச்சியில் திளைத்தோம்,நீங்கள் அரியணை ஏறியபோது.ஒடுக்கப்பட்ட இனம்...உயரே வளரப்போகிறது என.ஆனால் வளர்ந்தது,உங்கள் மாளிகையும்,
வர்த்தக கட்டிடங்களின் உயரமும் தான்.

இதோ சகோதரி மாயாவதி அளித்த‌ சொத்து ப‌ட்டிய‌ல்:

அ.சொந்த‌ கார்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍===========இல்லை
ஆ.கை மேல‌‍============50.27 ல‌ட்ச‌ம்
இ.வங்கி வைப்பு நிதி=====12.88 ல‌ட்ச‌ம்
ஈ.த‌ங்க‌ ந‌கை=============50.87 ல‌ட்ச‌ம்
உ.வைர‌ ந‌கை============49.75 ல‌ட்ச‌ம்
ஊ.வெள்ளி===============1.12 ல‌ட்ச‌ம்(சாப்பாட்டு சாத‌ன‌ம்)
எ.க‌ன்னாட் பிளேஸ்
வ‌ர்த்த‌க‌ வ‌ளாக‌ம்==========2.05 கோடி+1.27 கோடி (ரெண்டு)
ஏ.ல‌க்னோ வீடு===========97.42 ல‌ட்ச‌ம்
ஐ.ஒக்லா வ‌ளாக‌ம்=========15.5 கோடி

இத்த‌னைக்கும் மாயாவ‌தி சாதார‌ன‌ ஏழைக் குடும்ப‌த்தில் பிறந்த‌வ‌ர்.ஆசிரிய‌ராக‌ இருந்து,அர‌சிய‌லுக்கு வ‌ந்த‌வ‌ர்....க‌ன்ஷிராம் அவ‌ர்க‌ளின் உத‌வியினால் உல‌குக்கு அறிமுக‌மான‌வ‌ர்.

எங்க‌ள் முத‌ல்வ‌ர் க‌லைஞ‌ர் ,எழுதி ச‌ம்பாதித்த‌து என்பார்..சொத்து=26.5கோடி
முன்னாள் முத‌ல்வ‌ர் ஜெ.ஜெ ந‌டித்து ச‌ம்பாதித்த‌து என்பார்..சொத்து=24.6 கோடி இது மாதிரி,நீங்களும் சொல்ல‌லாம் எதிர்காலத்தில்,
நான் டியுச‌ன் ந‌ட‌த்தி ச‌ம்பாதித்த‌து என‌.

ஓட்டுப் பெட்டிக‌ள் தான் இங்கு நிறைய‌ உள்ள‌னவே,ஏமாறுவ‌த‌ற்கு???
வாழ்க‌ ஜ‌ன‌நாய‌க‌ம்.....அல்ல, ப‌ண‌ நாய‌க‌ம்.!!

சிவாஜி‍யை புடிக்க வந்த நிமிட்ஸ் கப்பல்?

Category :

என்ன ஆச்சரியமா இருக்கா....எனக்கும் அதே'''ங்''...
நம்ம சிவாஜி‍‍-ய தான் புடிக்க (படம் புடிக்க இல்ல) வந்துருக்காங்களாம்..

அத‌னால‌ தான் நிமிட்ஸ்-ஐ சென்னை க‌ட‌லில் நிறுத்திவிட்டு எல்லா போர்வீர‌ர்க‌ளும் சுத்தி பார்க்க‌ போயிருக்காங்க‌.அதுல‌ ஒரு கூட்ட‌ம் CIA ஐ சேர்ந்த‌தாம்.க‌ட‌ற்ப‌டை போர்வீர‌ர்க‌ள் நட்சத்திர‌ ஓட்ட‌ல்க‌ளில் வீர‌த்தை காட்டிக்கொண்டிருக்கும் போது,இந்த‌ CIA குழு ஒவ்வொரு தியேட்ட‌ருக்கும் போய் சிவாஜிய‌ தேடுதாம்.அவ‌ங்க‌ வேட்டிய‌ க‌ட்டிகிட்டு, ஆட்டோவுல‌ தான் போறாங்க‌ளாம்.

நேத்து ஒரு திரைய‌ர‌ங்கு(தியேட்ட‌ர்) சென்ற‌ போது,தியேட்ட‌ர்கார‌ங்க‌ இழுத்து‍கிட்டு போய் உள்ள‌ உக்கார‌ வ‌ச்சுட்டாங்க‌ளாம். தியேட்ட‌ருல அவ்ளோ கூட்ட‌மாம்(????) ஏசி-ய‌ கூட‌ நிறுத்திட்டாங்க‌னா பார்த்துக்கோங்க‌...
லைட்கூட‌ போட‌ல‌யாம்.

CIA அதிகாரிங்க‌ நைசா...ப‌க்க‌த்துல‌ இருந்த‌வ‌ங்க‌கிட்ட‌ பேச்சு கொடுத்தாங்க‌ளாம்.அட‌ த‌மிங்கிலிஷ்‍‍-ல‌ தான்.ஆனா ப‌க்க‌த்துல‌ இருந்த‌வ‌ரு அமெரிக்க‌ ஆங்கில‌ம் பேசிய‌போது திடுக்கிட்டாராம்.விசாரிச்சா அவ‌ரும் நிமிட்ஸ்-லேர்ந்து தான் வ‌ந்திருக்காரு,ப‌க்க‌த்துல‌ ஒரு பெண்புறா வுட‌ன்.
ச‌ரி எப்ப‌டா இடைவேளை வ‌ரும்னு காத்திருந்தாங்க‌ளாம்.....யாராவ‌து சிவாஜி ர‌சிக‌ன் மாட்ட‌மாட்டானா-ன்னு‌...இடைவேளை வுட்டும் லைட்டை போட‌ல‌யாம்.CIA அதிகாரி ஒருத்த‌ர் சிக‌ரெட்டு லைட்ட‌ர‌ கொளுத்துனா....அதிர்ச்சி....????இருந்தது ஒரு இருவ‌து பேர்.

ப‌ட‌ம் வுட்டு யாரா‌வ‌து வெளிய‌ வ‌ரும்போது,சிவாஜி ப‌த்தி கேட்க‌லாம் வ‌ழியிலே காத்திருந்தா யாருமே வெளியே போவ‌லையாம்.ஆச்ச‌ரிய‌ப்ப‌ட்டு அடுத்த ஷோவும் பாக்கபொறீங்களா‍ன்னு கேட்டாங்களாம் CIA. அதைக் கேட்டு,சார் நாங்களே நொந்து நூலாக இருக்கோம்,,,,போங்க சார்‍ன்னு தமிங்கிலத்துல சொன்னாங்களாம்.நாங்க எல்லாம் ஆஸ்ரமத்துல வேலை செய்யரோம்...இப்ப எங்க வேலை நாளு பூரா இங்க தூங்கறது தான்.என்ன‌ பன்றது சார்...தலை யெழுத்துன்னு வேலை செய்யறோம்.அதுல நல்ல ஆங்கிலம் பேசிய ஆஸ்ரம வேலைகாரர்....ஏன் சார்...எங்க சிவாஜிய பாக்கவா அமெரிக்காலேர்ந்து வந்தீங்க??...

நீங்க வேற....200 கோடிய அமெரிக்காலேர்ந்து சிவாஜி எடுத்துகினு வந்தாருல்ல...அந்த பணம் எங்க பணம்...அதை கண்டுபுடிக்கத்தான் வ‌ந்துருக்கோம்.அந்த பணத்த அவர் உழைச்சி சம்பாதிக்கல...அமெரிக்க‌ ஹவாலாவுல ''தில்லுமுல்லு''-‍ல சம்பாதித்தது......

இதைக் கேட்ட ஆஸ்ரம ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.ஒரு ரசிகர் மட்டும்.....CIA கிட்ட சொன்னார்,

''நாங்க‌ ஒரு த‌ட‌வ‌ ஏமாந்தா....
நூறு த‌ட‌வ‌ ஏமாறாம‌ வுட‌ மாட்டோம்''.

இப்ப‌ CIA அதிகாரிக‌ள் உறைந்த‌ன‌ர்.

அதிருதில்ல‌......

நிமிட்ஸ்‍‍‍‍‍ வருகையும்,நம் குய்யோ,முய்யோ‍-வும்!

Category :

ஆமாம்.ஜெ முதல் துறைமுக தொழிலாளர் சங்கம் வரை எதிர்க்கும் ஒரு செய்தியை பார்க்கிறோம்.

ஏன் இந்த ஊடகங்களும்,அரசியல்வாதிகளும் இந்த பலூனை ஊதி விளையாட்டு காட்டுகின்றனரோ தெரியவில்லை.ஒரு வேளை
வியாபாரமாக‌ இருக்கலாம்.அரசியல்வாதிகளுக்கு ஒரு இலவச விளம்பரத்திற்கான‌ வாய்ப்பாகவும் இருக்கலாம்.

இது ஒன்றும் புது நிகழ்வு அல்ல.ஏற்கனவே பிரஞ்சு அணுசக்தி கப்பல்கள் இந்தியா‍வுக்கு வந்து சென்றுள்ளன.அப்போது இந்த குரல்கள் எங்கு போயின‌ என்று புரியவில்லை?.

பொது மக்கள் கதிர் வீச்சினால் பாதிக்கப்படுவார்களாம்...என்ன கரிசனம்?இதுவே ரஷ்ய அணுசக்தி கப்பல் என்றால்,இந்திய காம்ரேடுகள்(தோழர் சீத்தாராம் யெச்சுரி உட்பட) வாயை சிவப்பு திரவத்தினால் ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.

இங்கே நம்ம கூடங்குளத்தில் ரஷ்யாவின் உதவியுடன் மிகப்பெரிய அணுமின் உற்பத்தி நிலையம்(2000MW) அமைக்கும் பணி வெகு வேகமாக‌ நடைபெறுவது அனைவருக்கும் தெரிந்த விசயமே.

இதனால் தண்ணீர் கிடைக்கிறதோ இல்லையோ மின்சாரம் கிடைக்கும்.பேச்சிபாறை அணையிலிருந்து ஒரு நாளைக்கு 30,891 M3/day அதாவது 3கோடி லிட்டர் தண்ணீரை அணுசக்தி உலைக்கு ப‌யன்படுத்தப் போகிறார்கள்.

இதன் மூலம் நம் உயிருக்கும் உலை வைக்கலாம்.அணுவினால் அல்ல...குடி நீரினால்.

அப்பாவும்,அம்மாவும்...ஆகாய விமானத்தில்!

Category :

ஆமாம்.இரு வாரங்களுக்கு முன் விடுமுறையில் பெங்களூரு‍‍க்கு குடும்ப‌ உறுப்பினர்கள்(நான்,மனைவி,மகன்,அப்பா & அம்மா) அனைவரும் விமானத்தில் சென்றோம்.

என் சின்ன ஆசையாய் இருந்தது,நிறைவேறியது..,மிக்க மகிழ்ச்சியாக‌ இருந்தது.கடலூரிலிருந்து பேருந்தில் நான்கு மணி நேர பயணம் செய்து,அரை மணி நேரத்தில் (Airbus-A320)பெங்களூரு வந்து சேர்ந்தோம்.
அம்மாவும்,அப்பாவும் மிகவும் ஆச்சரியமடைத்தனர்...முதல் விமான பயணம் சுலபமாய் முடிந்தது,கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
முதலில் நன்றி சொல்ல வேண்டியது...திரு.கோபிநாத் ,அவர்களின் ஏர் டெக்கான்-க்குத் தான்.அவர்தானே நடுத்தட்டு, கீழ் தட்டு மக்களையும் விமானம் ஏற வைத்தவர்.

பெங்களூரில் மூன்று தினங்கள் இருந்து அனைத்து இடங்களையும் பார்த்தோம்.பெங்களூரு‍-ம் சூடாகத் தான் இருந்தது.கணிணி நிறுவனங்கள் நிறைய வந்ததினால்,மிகப் பெரிய மாற்றம் எதையும் அடித்தட்டு மக்கள் பெற்று விடவில்லை என்பதை காண முடிந்தது.நிறைய பல அடுக்கு கட்டிடங்கள் வழியெங்கும் தென்பட்டன.கட்டிடத் தொழிலில் பெரும்பாலும் தமிழர்கள் தான் இருந்தனர்.

ப‌ய‌ண‌ம் இனிமையாய் முடிந்து வீடு திரும்பினோம்.

க‌டைசி வ‌ரி:

இனிய‌ ச‌கோதர‌,ச‌கோத‌ரிக‌ளே உங்க‌ள் பெற்றோர்க்கு ஏதேனும்செய்ய‌ விரும்பினால் த‌ய‌வு செய்து அவர்க‌ள் ஆரோக்ய‌மாய்,ந‌ல்ல‌நிலையில் உள்ள‌ போதே செய்யுங்க‌ள்.

காசு வ‌ரும் ,போகும்....?ஆனால்...!!!

கடலூர் குலுங்கியது....நேற்று!

Category :

ஆமாம்.பாட்டாளி இளைஞர் சங்க மது எதிர்ப்பு மாவட்ட பேரணி,
மற்றும் மாநாட்டினால் கடலூர் நகரம் கல கலகலத்துப் போனது.

உண்மையிலேயே மருத்துவர் ராமதாசு அவர்களை பாராட்டியே தீர வேண்டும்,இந்த விடுதலைப் போராட்ட அழைப்பிற்கு.....அதாவது தமிழக இளைஞர்களை மது மற்றும் போதை பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பது....பேரணியை வெற்றியாக்கிய பெருமை ச.ம.உ வேல்முருகனை சேரும்.
மாநாட்டில் கலந்து கொண்டோர்....மருத்துவர் ராமதாசு,மத்திய அமைச்சர்அன்புமணி,மத்திய தொடர் வண்டி(ரயில்) இணையமைச்சர் வேலு,பா.ம.க தலைவர் மணி ஆகியோர்.

மாநாட்டில் நிச்சயமாக கலந்து கொண்டோர் 35,000-யை தாண்டும்.இது சுமார் இரவு ஒன்பது மணி நிலவரம்.மஞ்சை நகர் மைதானம் முழுவதிமே நிரம்பி இருந்தது.எங்கும் இளைஞர்கள்,இளைஞர்கள்...முக்கியமாக அந்த மைதானத்தில் ஒரு இடத்தில் கூட புகையை (சிகரெட்டு)காண இயலவில்லை.தண்ணீர் பாக்கட்டுகளை மட்டுமே காண முடிந்தது.இளைஞர்கள் ஒரு நாள் விரதம் இருந்தார்களா...இல்லை.....உண்மையான மாற்றமா எனத் தெரியவில்லை.

நேற்று மதியத்திற்கு மேல் போக்குவரத்து முற்றிலும்....தடை பட்டது...வெளியூர் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.போலிசார் இவ்வளவு கூட்டத்தை எதிர் பார்க்காததின் விளைவு.....

முக்கியமாக பாராட்டியே ஆக வேண்டிய மற்றுமொரு செயல்.....கடலூர் நகர டிஜிடல் பேனர்கள் சுமார் 2500 சிறிது,பெரிது என இருந்தவை இன்று காலையிலேயே அகற்றப் பட்டு இருந்தது.

கடைசி வரி:

பா.ம.க-வின் அரசியல் நிலையை விமரிசிக்கலாம்.....ஏனெனில் அவர்கள் கடந்த கால நிகழ்வுகள் அப்படி.பா.ம.க-வின் சில செயல்கள், கொள்கைகள் கேலிக் கூத்தாக கூட இருந்துள்ளன முன்பு....

ஆனால் இன்றய சமுதாய சீர்கேட்டை துடைக்க,வருங்கால தலைமுறையினரை, குறிப்பாக இளைஞர்களை மது மற்றும் போதை பழக்கத்திலிருந்து மீட்க.....ஒரு விடுதலை போராட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ள.....மருத்துவர் ராமதாசை பாராட்டியே ஆக வேண்டும்.

கற்பு வேணுமா....கற்பு?

Category :

கற்''பூ''-வை மீண்டும் மலர வைக்கலாமாம்.
ஆமாம் ரூ.15000-ல் நீங்கள் இழந்த கற்பை பெறலாமாம்.
இது எங்கோ மேற்கத்தய நாடுகளில் நடப்பதல்ல....
நம்ம மும்பை-யில் தான்.

இந்த அரை மணி நேர அறுவை சிகிச்சை-யை செய்துகொள்வது
காதலித்து ஏமாந்த கல்லூரி பெண்களும்,கல்யாணத்துக்கு தயாரான
கன்னி கழிந்த பெண்களுமாம். இப்போது இந்த ஆபரேஷன்
மும்பை-யில் சூடு பிடித்துள்ளதாம்...

இந்த அறுவை சிகிச்சையை செய்வது நட்சத்திர''பிளாஸ்டிக் சர்ஜன்" மேலும் இந்த ஆபரேஷனுக்கு பெயர் ''Hymenoplasty".
விளக்கமாக கூறினாலும் அசிங்கப்படத் தேவை இல்லை..ஏனெனில் இது அறிவியலின் ஒரு பங்கு தான்.அதாவது உறுப்பின் மேல் புறத்தில்,படர்ந்திருக்கும் ஒரு திசுவிலான ஜவ்வாடை(Hymen)-யைத் தான் செயற்கை முறையில் பொருத்துகின்றனர்.

ஆணவ,அதிகார ஆண்களே இனிமேல்....இனிமேல் சந்தேகப்பட முடியாது முதல் இரவு......முதல்தான்...

கடைசி வரி:

ஆண்களுக்கும் இந்தமாதிரி ஏதாவது....சமாச்சாரம் இருந்தால்,
கல்யாணம் வரை கற்புடன் இருந்திருக்கிறானா..என அறியலாம்....
என்ன செய்வது படைத்தவன்....பிரம்மன் என்ற ஆண் அயோக்கியன் ஆயிற்றே!

தகவல்:dna,Mumbai

மாயாவதி செய்த மாயாஜாலம்!

Category :

தலித் பெண்மணி மாயாவதி இன்று உ.பி.-யின் முதலமைச்சர் ஆகிவிட்டார்.வாழ்த்துவோம்....ஒரு புதிய மறுமலர்ச்சி காணட்டும் உத்திர பிரதேசம்.இந்திய அரசியல் நிகழ்வில் இது ஒரு மைல்கல் என்பதில் ஆச்சரியம் இல்லை.ஆனால் இந்த நிகழ்வை டாக்டர் அம்பேத்கர்,பெரியார்,கன்ஷிராம் போன்ற புரட்சியாளர்கள் கண்டிருந்தால் மகிழ்ச்சி அடைந்திருக்க மாட்டார்கள்.


ஏனெனில் பெற்ற வெற்றி அப்படி...இந்த வெற்றி ஒடுக்கப்பட்டோர்,தாழ்த்தப்பட்டோரின் எழுச்சியினால் பெற்றதல்ல.மாறாக அரசியல் சித்து விளையாட்டின் வெற்றி.


இந்த அரசியல் மாற்றத்தினால் தலித்/ஒடுக்கப்பட்டோர் வாழ்வின் எதிர்காலம் வெளிச்சம் தந்தால் பாராட்டலாம்.மாறாக தற்போது கொண்டுள்ள அரசியல் உறவு(பிராமின்/தாக்கூர்)வெறும் அதிகாரத்திற்காக எனில் எந்த தலித்-தும் பெருமைப்பட போவதில்லை.
தேர்தல் முடிந்தவுடன் எக்சிட் போல்(வாக்கு பற்றிய கணிப்பு) நடந்த போது,நிறைய தலித் வாக்காளர்கள் கூறியது இது.''நாங்கள் எந்த சின்னத்தையும் பார்க்கவில்லை,யானை-யை தவிர''.யார் நிற்கிறார் என்று கூட எங்களுக்கு கவலை இல்லை என்று நிறைய பேர் கூறக் கேட்கமுடிந்தது.


மாயாவதி கூட தன் பிரச்சார பாங்கினை மாற்றினார்...உயர் ஜாதி-யினரை அரவணைத்து ஆட்சிசெய்வோம் என்று கெஞ்சினார்.இரு தேர்தலுக்கு முன் மாயாவதி கூறியது....அவரே மறந்தார்.''உயர் சாதியினரை உதைத்து உரிமையை பெறுவோம்''-என்ற அறை கூவல்.....எப்படியோ ஆட்சி என்பது குறியாகி அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.
இனிமேல்தான் பார்க்க வேண்டும்,இவரை ஆட்சியில் அமர்த்திய தலித் சமுதாயத்திற்கு என்ன கைம்மாறு செய்கிறார் என்று?இப்போது அவர் கட்சி-யில் 53 பேர் உயர் சாதி சட்ட மன்றஉறுப்பினர்கள்.(34-பிராமின்,19-தாக்கூர்)...போனமுறை மாதிரி அப்படியே முலாயம்-மிடம் விலை போக மாட்டார்கள் என எந்த உத்திரவாதமும்இல்லை.


இந்த வெற்றிக்கு பக்க பலமாக இருந்த இருவர்..,

1.மிஷ்ரா, முன்னாள் உபி அட்வகேட் ஜெனரல்-பிராமின்,மாயாவதி ''தாஜ்'' ஊழலில் கடந்த ஆட்சியில்மாட்டி தவித்த போது ......அவரை காப்பாற்றியவர்......அந்த ஒரே காரணத்திற்காக பகுஜன் கட்சியின்பொதுச் செயலாளர்=ஆகவும் ஆக்கி உயரே உட்கார வைக்கப்பட்டவர்.(தன் கட்சியினர் எதிர்ப்பையும் மீறி)
2.நசிமுதீன் சித்திக்,முஸ்லிம் தலைவர்....முன்னாள் உபி அமைச்சர்....முஸ்லிம் ஒட்டுகளைபெற்றதில் இவரின் பங்கும் அதிகம்.

ஆக பெற்ற வெற்றி எப்படி ஆயினும், இது ஒரு இனிய சகாப்தத்தின் ஆரம்பம்...பார்ப்போம் எப்படிஆள்கிறார் என......தமிழகத்தின் வாழ்த்துக்கள்...மாயாவதி!


கடைசி வரி:
அரசியல் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் கூறியது...''முதலாளித்தவமும்,பிராம்மனிசமுமே நமக்கு எதிரி......கடைசி வரை"


சென்னைப் பதிவர்களே....காமகேடி பூஜ்யஸ்ரி-பேசுகிறார்?

Category :


நேரம் கிடைத்தால் சென்று அருள் ஆசி வாங்கி,
எங்களுக்கும் ஓசி-யில் வழங்குங்கள்.
இன்று மாலை:6.00மணி,
இடம்:மியுசிக் அகாடமி





நன்றி:தந்தி

கிரிக்கெட் உலக கோப்பை- 2011, இந்தியாவுக்கே!

Category :


ஆமாம்...கிரிக்கெட் பிரியர்களே....

எப்படி என்று தானே அதிர்ச்சி அடைகிறீர்கள்?...

I.இப்ப நம்ம கோச் செப்பல்(Greg Chappell) ஆஸ்திரேலியா-காரர் தானே,அது மாதிரி 11 ஆட்டக்காரர்களையும் ஆஸ்திரேலியாவிலிருந்து தள்ளிக்கிட்டு வந்தா......நமக்குத் தானே கோப்பை???

BCCI- யே தயவு செய்து இப்போதே ஏற்பாடு செய்யுங்கள்.
அப்ப, நம்ம டீமை என்ன பன்றதூன்னு தானே கவலைப் படறீங்க....கவலையே வேணாம்....நம்ம ஆளுங்களுக்கு
இன்னும் விளம்பரப் படங்கள் பாக்கி இருக்கே!!

II. இல்லையென்றால் கீழ்கண்ட நாடுகளை மட்டுமே , அடுத்த 2011 உலக போட்டிக்கு அழைக்கவேண்டும்.

1.அமெரிக்கா
2.சீனா
3.ரஷ்யா
4.பிரான்ஸ்
5.இத்தாலி
6.ஜப்பான்
7.தென் கொரியா
8.சவுதிஅரேபியா
9.நார்வே
10.எத்தியோப்பியா
11.சிங்கப்பூர்
12.மலேசியா
13.ஈரான்
14.ஈராக்
15.ஆப்கானிஸ்தான்
16.இந்தியா....

கடைசி வரி:
2007-உலக கோப்பை..பரிசுக் குறிப்பு.
கோப்பை+ பரிசு பணம்-ஆஸ்திரேலியா பெற்றது- 2.2 மில்லியன் டாலர்
பறி கொடுத்த இலங்கைக்கு- 1மில்லியன் டாலர்
நமக்கு ,
பெர்முடா-வை வீழ்த்தியதிற்கு - 10,000டாலர்
பங்களாதேஷ்-யிடம் படுகாயம் அடைந்ததிற்கு - 5,000டாலர்
இலங்கை-யிடம் தோற்று இடத்தை காலி செய்ததிற்கு - 5,000டாலர்
ஆக, மொத்த வருமானம் - 20,000 டாலர்......

நன்றி:ராய்டர்,என்டி டிவி...AP

நாணயம் தவறியவர்கள்!!!

Category :

இப்போதெல்லாம் தினசரி செய்திதாள்களைப் படிக்கும்போது அடிக்கடி தென்படும் கால் பக்க,அரை பக்க பொது விளம்பரத்தைக் காணலாம்.
அவ் விளம்பரம் இதோ,''வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத நாணயம் தவறியவர்கள்".

குறிப்பாக கடன் வாங்கியவரின் புகைப்படமும்,கூடுதலாக ஜாமீன் கொடுத்தவர் புகைப்படமும் இனைந்திருக்கும்.அவர்கள்பெற்ற கடன் எதோ கோடி ரூபாய் என நினைக்காதீர்கள்.வெறும் 50ஆயிரம் முதல் 1லட்சம் வரை தான்.

இதற்குத் தான் இந்த மக்கள் வங்கிகள்(பொதுத் துறை வங்கிகள்)நடுத்தர மக்களுக்கு ''நாணயம் தவறியவர்கள்'' என பட்டம் வழங்குகின்றன.குறிப்பாக இந்த வங்கிகள் கடன் கொடுக்கும் முன்பே,விசாரித்து தான்,கடன் கொடுக்கின்றன.நல்ல வருவாய்,நிரந்தர பணி போன்றவகளை வைத்துதான் அனுமதி வழங்குகின்றனர்.ஏதோ போதாதகாலம்,கடன் பெற்றவர் அசலை கட்ட தாமதமாகும் போதுதான் இந்த வங்கிகள் இந்த மாதிரி அநாகரீக விளம்பரங்களை வெளியிடுகின்றன.

கூர்மையாக கவனித்தால் ,கடன் பெற்றவர்கள் பெரும்பான்மையானோர்,வீடு கட்டத் தான் வாங்கி இருப்பர்.ஏன் இச் சிறு தொகைக்கு இவ்வளவு செலவு செய்து,விளம்பரம் செய்கின்றனர்?.வங்கிகள் விளம்பர செலவையும் கடனில் ,அசிங்கமாக சேர்த்துக் கொள்வர்.ஆனால் இதே வங்கிகள் தொழிலதிபர்களுக்கு 100கோடி,200கோடி கொடுத்துவிட்டு நாய்(இந்த வார்த்தைக்கு மன்னியுங்கள்) மாதிரி அவர்கள் பின்னால் திரிவர்.
அந்த ஏமாற்றிய தொழிலதிபர், நாமம் சாத்தினாலும்,இவர்கள் இந்தமாதிரி அருவருப்பான பொது விளம்பரம் செய்வதில்லை.மாறாக நீதித் துறை(கோர்ட்)மூலம் தான் மனு செய்கின்றனர்,சொத்துகளை ஏலம் இட.

இன்றும் எத்தனையோ ஏமாற்றிய தொழிலதிபர்கள்,அரசியல் வாதிகள் மரியாதையுடன் தான் வலம் வருகின்றனர்.அவர்களைப் பற்றி இதே வங்கிகள் ''நாணயம் தவறியவர்'' என விளம்பரம் வெளியிடும் தைரியம் இருக்கிறதா?.,

அப்படி தைரியமாக வெளியிட்டால்,தினசரி செய்திதாளில் செய்திபோட முடியாது,ஏமாற்றிய தொழிலதிபர்களின் விளம்பரமே ....தினசரி சீரியல் மாதிரி போகும்.வங்கி அதிகாரிகளே, தைரியம் இருந்தால்.......செய்யுங்கள் பார்ப்போம்.

கடைசி வரி:
அய்யா டிபிஆர் ஜோசப்,அய்யா மெலட்டூர் நடராஜன்,அய்யா ஞானவெட்டியான் அவர்களே நீங்களாவது பதில் சொல்லுங்கள்.

இந்தியர்களே நமக்கு என்ன ஆச்சு?

Category :

இது கிரிக்கெட் பற்றிய பதிவு அல்ல.ஏன் நம் மக்கள் அகம்பாவத்துடன் நடந்து கொள்கின்றனர் என்பதின் தாக்கம் தான் இது?.அமெரிக்க,பிரிட்டிஷ்காரன் மாதிரி ஏன் நாம் மார்த்ட்டிக்கொள்ள வேண்டும்.,ஆணவம் கொள்ள வேண்டும்.

இந்தியா ,பங்களாதேஷ்-யிடம் தோல்வி அடைந்தது நிறைய நண்பர்களுக்கு அதிர்ச்சி.அவர்களுக்கு இது விளையாட்டு என்பது(சூது அல்ல)ஏன் புரியாமல் போகிறதோ?ஏன் நமக்கு இன்னும் மனப்பக்குவம் வரவில்லை?

ஒத்துக் கொள்கிறேன்,இந்தியனை இணைக்கிறது.அதே சமயம் அடுத்தவனை ஏன் குறைத்து மதிப்பிடுகிறீர்.புரிந்து கொள்ளுங்கள் இது நம் மண்ணின் விளையாட்டல்ல மேலும் இது ஒரு வர்த்தக விளையாட்டு என்பதை புரிந்து கொள்ள எத்தனை காலம் ஆகப்போகிறதோ நமக்கு?

ஏதன்ஸ் 2004 ஒலிம்பிக்...மெடல் பட்டியலில்..இந்தியாவை பாருங்கள்,
0-தங்கம்,1-வெள்ளி,0-வெங்கலம்.ஆனால் ஒரு சிறிய நாடான க்யுபா-வை பாருங்கள் 9-தங்கம்,7-வெள்ளி,11-வெங்கலம்.

இந்தியர்களே ,கிரிக்கெட்டும் ஒரு விளையாட்டு தான்,ஆனால் அதையும்விட மேன்மையான விளையாட்டுக்கள் உள்ளதை மறவாதீர்.
இந்தியா 2020 மகிழ்ச்சி தான்.....வலிமையான இந்தியா.....வளமையான இந்தியா....அதற்கு முன்பு அடுத்த பீஜிங் 2008-ஒலிம்பிக் போட்டி-யில்
2-தங்கமாவது வாங்க முயற்சி செய்வோம்(காசு கொடுத்து அல்ல)?.
அது கூட முடியவில்லை-யெனில் அர்த்தமே இல்லை.

இந்தியனே, விளையாட்டை விளையாட்டாய் பார்ப்போம்.அது தான் மனித நாகரீகத்தின் அடையாளம்.

கிரி (அ)வலம் ! -பாகம்- 1

Category :

போன மாதம் என் நண்பர் வற்புறுத்தலினால் ஒரு நாள் பயணமாக திருவண்ணாமலைசென்றோம்.கூட நான்கு நண்பர்கள்...வாடகை காரில் பயணம்....
அதிகாலை 4மணிக்கு கடலூரிலிருந்து புறப்பட்டோம்.வழி பாண்டி,திண்டிவனம்,செஞ்சி,என........

நண்பர் பகுத்தறிவாளர்.....இருந்த போதிலும் கார் வலத்தின் மூலம்....என்ன நடக்கிறது எனதெரிந்து கொள்ள ஆவலாக இருந்தார்.சிற்றுண்டியை திருவண்ணாமலையில் முடித்தோம்.

பின்பு அப்படியே படியேறினோம்.வழியெங்கும் சித்தர்கள்,சித்தர்கள்...கையில் சுருட்டு அல்லது சிகரெட்டு ....உற்சாகமாய் ஊதித் தள்ளினர்...அரை கிலோமீட்டர் தூரம் சென்றோம்...வழியெங்கும் ஏராளமான அறக்கட்டளைகள்.....சில சித்தர்களின் வாயையும் நாங்கள் கிளறத்தவறவில்லை.ஒன்று மட்டும் தெரிந்தது....வாழ்க்கையை எதிர் கொள்ள முடியாமல்...குடும்பத்தைக் கூடகாப்பாற்ற முடியாமல் ஓடி வந்த மகா மட்டமானவர்கள்....(இங்கே சித்தர்கள்...ஞானிகள்....என்ற போர்வையை மாட்டிக் கொண்டு)

சுமார் இரண்டு மணிநேரம் மலையில் இருந்து விட்டு,இறங்கி ....முதலாவதாக ரமணர் ஆசிரமம்சென்றோம்.இந்தியர்களை விட வெளிநாட்டினர் அதிகம் தென்பட்டார்கள்.செருப்பை ஒரு மூலையில்வைத்து விட்டு உள்ளே சென்று அனைத்தையும் கண்டோம்.நிறைய மக்கள் தியானத்தில் இருந்தனர்.எல்லோரும் மேல் தட்டு மக்களாக இருந்தனர்.....கீழ் தட்டு மக்களை கண்டது,அவர்கள் போட்ட 12 மணி அன்ன தானத்தின் போது தான்.....

இளைஞர்கள் கூட வரிசையில்.....அசிங்கமில்லாமல்.....உழைத்து உணவு உண்ணும் வயதில் பிச்சைக்காரனாய்.....இதுதான் சுகமான வாழ்க்கை என வழி தவறி விட்டார்களோ?.....பாவம்...அவர்களை பெற்றவர்கள்...
அங்கே ஒரு அழகான வெள்ளை மயில்....திரிந்து கொண்டிருந்தது...பூங்காவும் இனிமையாகவைத்திருந்தனர்.

அடுத்த இடம்...விசிறி சாமியார் என அழைக்கபடும்....ராம் சுரத்குமார் ஆசிரமம்....மண்டபம் ஆடம்பரமாக இருந்தது.இங்கேயும் தியானம்.....தியானம்....எதையோ இழந்து இங்கு வந்துதேடிக் கொண்டிருந்தனர்.தியான மண்டபம் மிக சுத்தமாக இருந்தது...அனைத்தையும் பார்த்துவிட்டுபிரதான சாலைக்கு வந்தோம்,அங்கிருந்த டீ-க்கடையில் தேநீர் பருகினோம்,பெண்மனி தான் கடையின் நிர்வாகியாம்.பெருமையாக இருந்தது...பிச்சைகாரர்களின் ...படையெடுப்பு அதிகமாககாண முடிந்தது,பின்பு தான் புரிந்தது...டீ-தானம் திருவண்ணாமலை-யில் செய்யப்படுவதில்லை என.

பின்பு நண்பர், பேக்கரி-கடைக்கு சென்று வறிக்கி பிஸ்கட்டும்,ஒரு பை நிறைய வாழை பழமும்வாங்கி வந்தார்.நண்பரிடம் எதற்கு இவ்வளவு எனக் கேட்ட போது....அப்புறம் சொல்கிறேன் என்றார்.

மீதி அடுத்த பதிவில்....கை வலிக்கிறது....

காதலர் தினமா,கண்றாவி தினமா?

Category :

வியாபார விசயமாக 14-02- 2007 அன்று கடலூர்-லிருந்து சென்னைக்கு
கிழக்கு கடற்கரை சாலை ( ECR )வழியாக சென்றதன் தாக்கம் தான் கீழே.,


பேருந்து மாமல்லபுரத்தை தாண்டியபோது ......,இரு பக்கமும் ,இரு சக்கர வாகனங்கள்,கார்கள்,என பலப்பல .

பின்பு தான் என் மண்டைக்கு உறைத்தது,இன்று காதலர் தினம் என்று.,வெளிநாட்டிலிருந்து
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு வியாபார திருவிழா.
அன்றைய தினம் அனைத்து பண்பலை வானொலி-யும் காதலை சொல்லியே வதைத்தனர்.சும்மா சொல்லக்கூடாது.....முட்டுக்காடு முதல் திருவான்மியூர் வரை சவுக்கு தோப்பெல்லாம் அவன்,அவள் தலைகள்....அவன் மேல் அவள்., அவள் மேல் அவன்.,,,கண்றாவிக் கோலங்கள்.

நாகரீக மாற்றத்தின் அவலங்கள்.,ஒழுக்கம் கூட கேலிப் பொருளானது தான் வேடிக்கை.மாறிவரும் சமுதாய அமைப்பு எதிர்காலத்தில் என்ன ஆகப் போகிறதோ என கவலைப் படாமல் இருக்க முடியவில்லை....

"சவுக்கு தோப்பு
பக்கத்தில் கார்
ஒன்றான செருப்பூ
அவன்...அவள்
கட்டிலில் காதல்?...

முன்கதை:
சரியாக 7.00மணி,கடலூர் பேருந்து நிலையம்....சென்னை பேருந்துக்கு நின்றபோது 70வயது மதிக்கத்தக்க பாட்டி.....தம்பீ...என கூப்பிட்டு திரும்பினேன்.டீ-குடிக்க எதாவது குடுப்பா என்றார்.நல்ல உடை அணிந்திருந்தார்.....ஒன்னரை ரூபா கொடுத்து விட்டு.,
பாட்டியின் கதை கேட்டேன்.(உண்மைக் கதை)

பெயர்: மீனாட்சி அம்மாள்
ஊர்:தேவனாம்பட்டினம்(கடலூர்)
இழந்தது:வீடு,வாசல்,மகன்கள்,உறவு...
பணி:பிச்சை எடுத்து வாழ்க்கையை ஓட்டுவது
இருப்பிடம்:சுப்புராயலு நகரை தாண்டி,ஒதுக்குப்புறத்தில்..ரூ300-ல் வாடகை வீடு
உடன் பிறந்தோர்: தங்கை ,,,,,,மற்றும் உறவினர் நல்ல நிலையில் உள்ளனர்
பாடம்:இளைஞர்,இளைஞி களே ஒரு வேண்டுகோள்.தயவு செய்து தாய்,தந்தையரை இப்படி ஒரு நாள் பார்க்க வைக்காதீர்.
பெற்றவர்கள் என்ன பாவம் செய்தார்கள்....

கடைசி வரி:

கார் நிறுத்தக் கூட விசால இடம்.,
கட்டிப் போட பெரிய நாய்
மாளிகை மார்பிள்ஸ் வீடு
இருட்டறையில் பெற்றோரின்
விசும்பல்கள்.குரைத்தது,,,
நாய்.....

மனிதம் மறைகிறதா?????!!!!!!

Category :

இப்போதெல்லாம் செய்திகள் ஆரவாரப்படுத்தப்படுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.குறிப்பாக '' நொய்டா'' பிஞ்சுக் கொலைகள், கணவனைக் கொல்லும் கள்ள காதலிகள்,சகோதரனை கொலை செய்யும் உடன் பிறந்தோர் என அடுக்கிச்செல்லலாம்.

காரணம் ஆயிரம் சொல்லலாம்,.மனிதனின் மாறும் வாழ்வு முறை,மிகைப் படுத்தப்படும்தொலைக்காட்சி செய்திகள்,பணம் தான் வாழ்க்கையின் அளவுகோல் என திரிக்கும் பத்திரிகைகள்.

எல்லோருக்குமே ஆசை உழைக்காமல் சம்பாதிக்க வேண்டும் என்று.,இதற்கு தடை எனும் போது மனிதன் மிருகத்தை விட கேவலமான செயல்களை செய்கிறான்.

ஊடகங்கள் எப்படி சொகுசாக வாழலாம்.,குறுக்கு வழி என்ன? போன்ற தகவல்களைத்தான் நம்காதில் ஊற்றுகின்றன.விட்டுக் கொடுக்கும் குணம் மழுங்கிக் கொண்டே போகிறது.நம்முடையதொலைக்காட்சி சீரியல்கள்,ஒழுக்கமான வாழ்க்கை முறையையே கேள்விக்குறியாக்குகின்றன.
பகுத்தறிவு கொஞ்சம் கூட பயன்படுத்தப்படுவதில்லை.,படித்தவர்கள் தான் ஜோதிடம்,பெயர் மாற்றம்என சொல்லி ஊரை ஏமாற்றி,பணத்தை சுருட்டுகின்றனர்.மருத்துவர்களோ .,மனிதாபிமானத்தைமறந்து விட்டு பணம் என்ற மாயை-யில்.

இந்தியா எங்கு செல்கிறது எனத் தெளிவாக கூறமுடியவில்லை?.ஒரு பக்கம் பொருளாதார வளர்ச்சி,மறுபுறம் அடித்தட்டு மக்களின், அடிப்படை தேவை கூட பூர்த்தியாகாமை....ஆங்கில புத்தாண்டைகூட அடித்துக் கொண்டு கொண்டாடும் அவலம்.,

கடலூர் அருகே டிசம்பர் 31ஆம் தேதி நடந்த நிகழ்வு., கொடூரமானது.,
நள்ளிரவு 12.00மணிக்கு ஒரு இளைஞர் கூட்டம்,ரோட்டில் போவோரையெல்லாம் நிறுத்தி இனிப்புகொடுக்கின்றனர்.,அப்போது சக அடித்தட்டு இளைஞர் இருவர், கேலி செய்ய இனிப்பு கொடுக்கிறீர்களா? என கேட்கப் போய் கொலையில் முடிந்த கொடூரமான நிகழ்வு அது.அதன் பின் ஒரு வாரத்திற்கு அங்கு அமைதி பாழானது.

புரிந்து கொள்ளல் கூட புதிராகிப் போனது தான் கொடுமை.

கடைசி வரி:
மனிதம் புரிந்து கொள்வோம்,மனித உறவுகளை வளர்ப்போம்.

சகோதரிகளே ஒரு மார்கழி எச்சரிக்கை???

Category :

இரு தினங்களுக்கு முன் பக்கத்து தெருவில் நடந்த நிகழ்விலிருந்து,எங்கள் வீட்டை அதிகாலையிலேயே அலங்கரித்த மார்கழி கலர்''கோலம்'' ,இப்போது அலங்கோலமாகிவிட்டது.

அதிகாலை சுமார் 5 மணிக்கு பக்கத்து தெருவில் இருக்கும் (எங்களுக்கு பழக்கமானவர்)கல்யாணமான பெண்மணி வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தபோது ஒரு ரோமியோசர்,புர் என்று மோட்டார் சைக்கிளில் சென்று வந்துள்ளான்.சிறிது நேரம் கழித்து வண்டியில்வட்டமடித்தவன்,கோலத்தின் மேல் ஏற்றி,மிக அருகில் வந்து.,ஏதோ செய்ய முயன்றவனை,சுதாரித்து கொண்டு பக்கத்தி இருந்த தொடப்பத்தினால்(விளக்குமாரு) விளாசி இருக்கிறார்.,பயந்துபோனவன்.,உதையை தாங்கும் ஆண்மையின்றி ஓட்டம் பிடித்திருக்கிறான்.பின்பு சத்தம் கேட்டுஅனைவரும் போன போது இந்த கதையை விவரித்தார் அந்த வீர பெண்மணி.அவர் புதுச்சேரியில்(பாண்டிச்சேரி) ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.தைரியத்தை பாராட்டி விட்டு வந்தோம்.

ஆனால் அடுத்த நாள் அதிகாலையில் என் மனைவி,என்னையும் எழுப்பினார்.,அவ்வளவு தைரியம் என்மனைவிக்கு!!!,கோலம் போடும் வரை காவலுக்கு நான்.,,,மார்கழி....எப்போது கழியுமோ என??????

சகோதரிகளே,காவலுக்கு ஆள் இல்லையென்றால் நல்ல கழி அல்லது வாட்டமான கற்களை பக்கத்தில்வைத்துக் கொள்ளுங்கள்.மேலே கண்ட ஆயுதங்களை பயன்படுத்த தயக்கம் எனில்,எடுங்கள் மிளகாய் பொடி,கலர் கோல மாவு மாதிரி இருக்கும்.இதை வைத்து ஒரு படையையே சமாளிக்களாம்.

எவனாவது விளையாட வந்தால் அவன் விதியை மாற்றுங்கள்.

கடைசி வரி:
சென்னை பெண்களுக்கு இந்த ''டிப்ஸ்''பயன்படாது.,ஏனெனில் அவர்கள் அடுக்கு மாடிகுடியிருப்பில் இருந்து கொண்டு ''சீரியல் கோலங்கள்'' மட்டுமே பார்ப்பதால்.....!!!